Saturday, October 27, 2007

மக்களின் எந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருக்கிறது மகிந்த அரசாங்கம்?: ஜே.வி.பி.

[சனிக்கிழமை, 27 ஒக்ரோபர் 2007] மக்களின் எந்தப் பிரச்சினைக்குத் தீர்வு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கண்டிருக்கிறது என்று ஜே.வி.பி. கேள்வி எழுப்பியுள்ளது. பதுளையில் நடைபெற்ற நிகழ்வில் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா பேசியதாவது: மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு திடீரென ஜே.வி.பி. நினைவுக்கு வந்துள்ளது. அதனால் அரசாங்கத்தைப் பாதுகாக்க தற்போது முற்போக்கு சக்திகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அரசாங்கத்தைப் பார்த்தால் யாராலும் அதனையிட்டு மகிழ்ச்சியடைய முடியாது. யாராலும் இதனைக் காக்கவும் முடியாது. இந்த அரசாங்கத்தை அமைக்க பங்களிப்புச் செய்த யாருக்கும் மகிழ்ச்சியில்லை. இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின் எமது இந்த அரசாங்கத்தை அமைக்க பங்களிப்புச் செய்த மக்கள் சமூகத்தின் ஏதேனுமொரு பிரச்சினையைத் தீர்த்திருக்க வேண்டும். இந்த அரசாங்கம் எமது நாட்டின் எந்த மக்கள் சமூகத்தின் பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருக்கிறது என்று நீங்கள் அனைவரும் சிந்தித்துப் பாருங்கள். இந்த அரசாங்கத்தை அமைக்க உழைக்கும் மக்கள் பெரும் பங்களிப்பினைச் செய்தார்கள். தற்போது அந்த மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளனவா? அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனரா? எந்த நாளும் அந்த மக்கள் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. அவர்கள் ஆர்ப்பாட்டம், சத்தியாக்கிரகம், வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட வேண்டியுள்ளது. சரி வேலை செய்யும் மக்களின் பிரச்சினைகளைத் தான் தீர்க்கவில்லை. வர்த்தகர்களின் பிரச்சினையையாவது தீர்த்துள்ளதா என்றால் அதுவும் இல்லை. எமது நாட்டின் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியின்றியே இருக்கிறார்கள். வர்த்தக நிலையங்கள், தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. இந்த அரசாங்கத்திடமிருந்து எந்தவித மானியங்களும் இல்லை. கொள்கைகளும் இல்லை என்றார் அவர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.