[திங்கட்கிழமை, 1 ஒக்ரொபர் 2007] மன்னார்ப் பகுதியில் இரு வேறு பகுதிகளில் நடைபெற்ற சமர்களில் ஒரு அதிகாரி உட்பட 7 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் 54 பேர் படுகாயமடைந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "த நேசன்" வார ஏடு தெரிவித்துள்ளது. "த நேசன்" வார ஏட்டில் வெளியாகியுள்ள செய்தியின் தமிழ் வடிவம்: யாழ். நாகர்கோவில்- முகமாலை- கிளாலி அச்சில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையில் இரு சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். தற்போதைய சிறிலங்கா இராணுவத்தினரின் நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் வன்னியில் உள்ள 6,500 சதுர கி.மீ. பரப்பிற்குள் முடக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியில் விடுதலைப் புலிகளின் பலம் 3,000 உறுப்பினர்களாகும். அதில் யாழ். குடாநாட்டிற்கான முன்னரங்கில் நிறுத்தப்பட்டுள்ள 1,800 விடுதலைப் புலிகளும் அடக்கம். மேலும் 1,200 கடற்புலிகளும் உள்ளனர். கடந்த ஆண்டு ஓகஸ்ட் 11 ஆம் நாள், ஒக்ரோபர் 11 ஆம் நாட்கள் நடைபெற்ற தாக்குதல்கள் முதலில் தாக்குதலை தொடங்குவோர் அதிக விலைகளை செலுத்த வேண்டும் என்பதனை காட்டியிருந்தன. எனினும் கடந்த வருடம் நடைபெற்ற இரு பெரிய தாக்குதல்களுடன் ஒப்பிடும் போது இந்த வாரம் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல்களில் அவர்களின் இழப்புக்கள் குறைவானது. கிளாலியில் சிறிலங்கா இராணுவத்தினரின் டாங்கிகளின் தாக்குதலுடன் தாக்குதலை தொடங்கியதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்திய போதும் விடுதலைப் புலிகளே 120 மி.மீ, 81 மி.மீ. மோட்டார் தாக்குதல்களை நடத்தியதாக சிறிலங்கா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். தம்பனைப் பகுதி மீது விடுதலைப்புலிகள் கடந்த சனிக்கிழமை (22.09.07) மேற்கொண்ட பீரங்கித் தாக்குதல்களில் இராணுவத்தின் கப்டன் தர அதிகாரியான அலகியவன்னாவும் 3 சிறிலங்கா இராணுவத்தினரும் கொல்லப்பட்டதுடன், 32 பேர் காயமடைந்தனர். பெரிய தம்பனை ஊடாக விளாத்திக்குளம் நோக்கி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை வன்னிப் பகுதிக்கான சிறப்புப் படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய, பிரிக்கேடியர் ஜெகத் டயஸ் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர். ஏ-9 வீதிக்கு கிழக்கான பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 57 ஆவது படையணி நிலைகொண்டுள்ளது. அது பெரும் சமர்களை சந்தித்து வருகின்றது. அதன் கட்டளை அதிகாரியாக ஜெகத் ரம்புக்பொதா அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தார். இதனிடையே கடந்த திங்கட்கிழமை மற்றுமொரு நடவடிக்கைக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மன்னாரில் உள்ள கட்டுக்கரைக்குளம் மீதான நடவடிக்கை அதுவாகும். இராணுவத்தின் இரண்டாவது கொமோண்டோப் பிரிக்கேட்டும், 10 ஆவது கஜபா றெஜிமென்ட்டும் இந்த தாக்குதலில் பங்கேற்றன. அந்தப் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் பதுங்குகுழிகளை கைப்பற்றுவது தான் சிறிலங்கா இராணுவத்தினரின் திட்டம். அங்கிருந்து மன்னார் -–வவுனியா சாலையில் செல்லும் வாகனங்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்களை மேற்கொண்டு வந்திருந்தனர். இந்த நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது கடுமையான எதிர்த்தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்தனர். இதில் 3 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் 22 பேர் காயமடைந்தனர். கொமோண்டோப் படைப்பிரிவின் அதிகாரியான கப்டன் துசாரா வெற்றசிங்க தனது காலை இழந்தார். குடும்பிமலை நடவடிக்கையின் போது சிறப்பாக பணியாற்றியதற்காக அவருக்கு "வீர விக்ரம விபூசன" விருது வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த வாரம் மன்னாரில் நடைபெற்ற நடவடிக்கையில் மிதிவெடியில் காலை வைத்த அவர் தனது ஒரு காலை இழந்தார். சிறு குழுக்களாகவே சிறிலங்கா இராணுவத்தினர் தமது நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் காடுகளுக்குள் ஊடுருவி வருகின்றனர். இலகுவாக தாக்குதல்களுக்கு உள்ளாகும் வகையில் சிறிலங்கா இராணுவத்தினரையும் டாங்கிகளையும் அனுப்பும் முன்னைய உத்திகளில் இருந்து இது வேறுபட்டது. நான்காம் ஈழப்போரில் சிறிலங்கா இராணுவத்தினர் பீரங்கிகள், மோட்டார்கள், பல்குழல் உந்துகணை செலுத்திகள் போன்றவற்றை பெருமளவில் பயன்படுத்தி வருவதுடன், காட்டுப்புற சமரிலும் ஈடுபட்டு வருகின்றனர். தரையில் இருந்தும், இலத்திரனியல் கண்காணிப்புக்கள் மூலமும் பெறப்படும் தகவல்களை கொண்டும் வான்படையினர் குண்டு வீச்சுக்களிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி:புதினம்
Monday, October 01, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.