[ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2007] "சண்டே லீடர்" வார ஏட்டின் ஊடகவியலாளர் ஆர்தர் வாமணனை பிணையில் விடுவிப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்த குற்றப் புலனாய்வுத்துறையினர் அதற்கான ஒரு காரணமாக அந்த ஊடகவியலாளர் தமிழர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆர்தர் வாமணின் பிணை மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் கல்கிசை பிரதம நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது அவரைப் பிணையில் விடுதலை செய்வதற்கு ஆட்சேபம் தெரிவித்த குற்றப் புலனாய்வுத்துறையினர் காவல்துறையினர் இச்சம்பவத்தில் உள்ளூர் மற்றும் அனைத்துலக தொடர்புகள் இருக்கிறதா என்பதனை விசாரிப்பதற்காக மேலதிக விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது எனத் தெரிவித்தனர். மேலும் ஆர்தர் வாமணன் ஒரு தமிழர் என்பதனையும் சுட்டிக்காட்டியதுடன் அவரை விடுதலை செய்தால் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஆர்தர் வாமணன் சார்பாக சட்டத்தரணி ஜி.ஜி.அருட்பிரகாசத்தின் வழிகாட்டலில் முன்னிலையான சட்டத்தரணி நளின் லுடுவாஹெட்டி மேற்படி இன ரீதியான இக்கூற்றை கடுமையாக ஆட்சேபித்தார். "தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக அவரை பிணையில் விடுதலை செய்வதை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஆட்சேபித்தால் ஒரு சிங்களவரனான நான் சிங்களவர் என அழைக்கப்படுவதனையிட்டு வெட்கமடைகிறேன்" என்றார் அவர். இம் மனுவை விசாரித்த கல்கிசை நீதிபதி அயேசனி ஜயசிங்க, தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் ஆர்தர் வாமணனை விடுவித்ததுடன் வழக்கை நவம்பர் 30 ஆம் நாளுக்கு ஒத்திவைத்தார். ஆர்தர் வாணமன் தன்னிடம் 50 லட்ச ரூபா லஞ்சம் கோரியதாக அமைச்சர் மனோ விஜரட்ன தெரிவித்த புகாரையடுத்தே வாமணன் கைது செய்யப்பட்டார். அமைச்சர் மனோ விஜரட்னவின் மனைவியின் தொலைபேசிக் கட்டணத்தை இரத்தினக்கல் ஆபரணக் கூட்டுத்தாபனம் செலுத்தியதாக கிடைத்த தகவல் குறித்து அமைச்சரின் கருத்தை அறிவதற்காகவே அமைச்சரிடம் தொலைபேசி மூலம் பேசியதாகவும் செய்தியை வெளியிடாதிருப்பதற்காக அவரிடம் பணம் எதுவும் கோரவில்லை என்றும் ஆர்தர் வாமணன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Sunday, October 28, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.