Monday, October 22, 2007

வான், தரை வழியாக அநுராதபுர வான்படைத் தளம் மீது தாக்குதல்

[திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2007] அநுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது விடுதலைப் புலிகள் இன்று அதிகாலை இரு முனைத் தாக்குதல் ஒன்றைத் தொடுத்துள்ளனர். தரை வழியாலும், வான் படையைப் பயன்படுத்தியும் விடுதலைப் புலிகள் நடத்திய இத்தாக்குதலில் படைத்தரப்புக்குப் பலத்த இழப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகின்றது. இன்று அதிகாலை 3.00 மணியளவில் அநுராதபுரம் வான்படைத் தளத்துக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகள், சிறிய ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி இத்தாக்குதலை ஆரம்பித்தனர். அதேவேளையில் காலை 4.00 மணியளவில் விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் அப்பகுதிக்கு வந்து வான் தளத்தின் மீது குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியிருக்கின்றது. விடுதலைப் புலிகளின் வானூர்திகளிலிருந்து இரண்டு குண்டுகள் போடப்பட்டன. பிந்திக் கிடைத்த செய்திகளின்படி அநுராதபுரம் பகுதியில் தொடர்ந்தும் கடுமையான குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அதிகாலை 5.00 மணியளவில் கடுமையாகக் காயமடைந்த 3 வான் படையினர் அனுராதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலில் அனுராதபுரம் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா வான் படையினரின் 2 ரஸ்யத் தயாரிப்பான எம்ஐ-24 ரக உலங்கு வானூர்திகள் சேதமடைந்துள்ளன. மிகிந்தலைப் பக்கம் வீழ்ந்து நொருங்கிய பெல் - 212 ரக உலங்குவானூர்தியில் சென்ற சிறிலங்கா வான்படையைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 8 வான் படையினர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.