Tuesday, August 28, 2007

கோத்தபாயவின் கருத்து போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையிலானதா என்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம் : போ.க.குழு

[செவ்வாய்க்கிழமை, 28 ஓகஸ்ட் 2007]

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கருத்து போர்நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையிலானதா என்பது பற்றி இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு கவனம் செலுத்தியிருப்பதாகத் தெரியவருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியிருந்த கோத்தபாய ராஜபக்ஷ, சமாதானப் பேச்சுவார்த்தைக்கான கதவுகளை மஹிந்த ராஜபக்ஷ திறந்தே வைத்துள்ள போதும், வன்னியை இராணுவ ரீதியாகக் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகக் கூறியிருந்தார்.

கண்காணிப்புக்குழு இந்தக் கருத்துத் தொடர்பாக கவனம் செலுத்தியிருப்பதுடன், கண்காணித்தும் வருகின்றது. இது தொடர்பான பதில் கருத்தை வழமையான அறிக்கையில் வெளியிடவுள்ளோம் எனக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்தை முழுமையாகக் கைப்பற்றி அங்கு சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்கில் வன்னிப் பகுதியையும் கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தார்.

சமாதானத்துக்கான கதவுகள் மூடப்பட்டிருப்பதாக அரசாங்கம் கூறுவதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லையெனக் கூறியிருக்கும் தேசிய பாதுகாப்புப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதைத் தவிர விடுதலைப் புலிகளுக்கு வேறெந்தத் தெரிவும் கிடையாதெனக் கூறியுள்ளார்.

பலமாக இருக்கும் போதே விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு வருவதே சிறந்தது. கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக மீட்டுள்ள நிலையில் பேச்சுக்கு வருவதைத் தவிர விடுதலைப் புலிகளுக்கு வேறந்தத் தெரிவும் இல்லை. அல்லது தேசிய பாதுகாப்பைக் கருதி நாங்கள் வடக்கையும் அவர்களிடமிருந்து மீட்கவேண்டிய நிலை தோன்றும் என அமைச்சர் ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு என வரும் போர்நிறுத்த உடன்படிக்கை மீறப்படுகின்றது என இலங்கைக் கண்காணிப்புக் குழுவினர் கூறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டார்.

- சங்கதி

1 comment:

  1. போர் நிறுத்த ஆய்வாளர் என்னும் நிலைக்கு கண்காணிப்பு குழு பதவி உயர்ந்து உள்ளது..

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.