Tuesday, July 03, 2007

கொழும்பு துறைமுகப் பகுதியில் நீருக்கடியில் கண்காணிப்பு கருவிகள்.!!

[திங்கட்கிழமை, 2 யூலை 2007]

கொழும்புத் துறைமுகத்ததை விடுதலைப் புலிகளின் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்காக துறைமுகத்தில் நீருக்கடியிலான கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்த பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தலை தவிர்ப்பதற்காகவே இந்தப் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளும் துறைமுக அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

நீருக்கடியிலிருந்து வரும் அச்சுறுத்தல்களையும் கடற்புலிகளின் சுழியோடிகளது அச்சுறுத்தலையும் தடுத்து நிறுத்தும் வகையிலே இந்தக் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வர்த்தக ரீதியாக இவ்வாறான கண்காணிப்புக் கருவிகளை கொள்வனவு செய்வதென்பது மிகக் கடினமென்பதுடன் பல நாடுகளுக்கும் அல்-ஹைடா அமைப்பால் விடுக்கப்பட்ட பெரும் அச்சுறுத்தலையடுத்து நவீன கடற்படைகளைக் கொண்ட குறிப்பிட்ட சில நாடுகளிடமே இவ்வாறான கருவிகளுள்ளன.

கொழும்புத் துறைமுகத்திலும் இவ்வாறான கருவிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கருவிகளானது அதிகூடிய செலவிலானதென்றாலும் கொழும்புத் துறைமுகமே இலங்கையின் மிக முக்கிய போக்குவரத்து மையமாயிருப்பதால் அதனைப் பாதுகாப்பதற்கு இந்தக் கருவிகளைப் பொருத்துவதைத் தவிர வேறு வழியில்லையெனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

கொழும்புத் துறைமுகத்தினூடாகவே 90 வீதத்திற்கும் மேலான வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் கொழும்புத் துறைமுக செயற்பாட்டில் தடங்கல்கள் ஏதும் ஏற்படுமானால் அது நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாகப் பாதிக்கும்.

கொழும்புத் துறைமுகம் மீது தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் முயற்சிகளை மேற்கொண்டுவருவது புலனாய்வுப் பிரிவுத் தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் துறைமுகத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியிருப்பதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.