[திங்கட்கிழமை, 30 யூலை 2007]
மணலாற்றில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதலை நடத்தக்கூடும் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் வார ஏடான "த நேசன்" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் தெரிவித்துள்ளது.
அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:
சிறிலங்கா வான்படையினர் இந்த வாரம் வன்னியில் பல வான் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருப்பதாக சந்தேகிக்கப்படும் மூன்று இடங்களில் ஒன்றான ஒட்டிசுட்டானில் இருந்து வடமேற்காக உள்ள முதலியார்குளமும் ஒன்றாகும்.
மணலாற்றுப்பகுதியில் படையினர் தம்மை பலப்படுத்துவதாக விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன் பின்னர் இரு மாதங்களாக மணலாற்றில் உள்ள எதவெடுநுவெவ கிராமம் விடுததலைப் புலிகளின் தொடர்ச்சியான மோட்டார் எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றது.
இதனிடையே விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட கட்டளைத் தளபதியான கேணல் சொர்ணம் தனது இரு பிரிக்கேட்டுகளுடன் மணலாறு நோக்கி நகர்ந்துள்ளதாக சிறிலங்காவின் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. அவரது படையணி அவசர தேவைகளின் போது உதவும் நோக்குடன் அங்கு நிலை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.விடுதலைப் புலிகள், ஒரு பெரும் இராணுவ வெற்றியை அடைய முயன்று வருகின்றனர். பெரும்பாலும் அது மணலாற்றில் உள்ள படை முகாம்கள் மீதான தாக்குதலாக இருக்கலாம். எனினும் வவுனியா மற்றும் மன்னார் பகுதிகள் மீதான தாக்குதலையும் மறுக்க முடியாது. ஏனெனில் அங்கும் விடுதலைப் புலிகள் தமது கனரக ஆயுதங்களை நகர்த்தியுள்ளனர். மன்னாரில் உள்ள நீலாச்சேனை காவல் நிலைகள் மீதும் அண்மையில் விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தியிருந்தனர்.
விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதிகளான பாணு, பால்ராஜ், கோபால் மாஸ்ரர், நிசாந்தன் மாஸ்ரர் ஆகியோர் மன்னாரின் மடுப்பகுதிக்கு விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தினால் அழைக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்காவின் படையினரின் பிரதம பாதுகாப்பு அதிகாரியான எயர் சீஃப் மார்சல் டொனால்ட் பெரேரா, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோரும் வன்னிக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை மன்னார் மதவாச்சி வீதியில் உள்ள செட்டிக்குளத்தில் நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் இராணுவத்தினருக்கு பலத்த உயிரிழப்பை சந்தித்திருந்தனர். இராணுவத்தினருக்கு சந்தேகம் வராதபடி கிளைமோர் உந்துருளியில் பொருத்தப்பட்டிருந்தது. உந்துருளி ஒன்றில் பொருத்தப்பட்ட கிளைமோர் மூலம் காவல்துறையினரின் வாகனத்தை இலக்கு வைத்த ஒரு மாதத்தின் பின்னர் இது நிகழ்ந்துள்ளது.
இந்த கிளைமோர் தாக்குதல் கொழும்பிற்கு ஒரு செய்தியை வழங்கியுள்ளது. அதாவது இராணுவத்தினருக்கு பாதுகாப்பு இல்லை என்பதே அதுவாகும். இது தற்போது நடைபெற்று வரும் இராணுவத்தினருக்கு ஆட்களை சேர்க்கும் முயற்சியை நிறுத்தும் முயற்சியாகும்.
ஜூலை 29 ஆம் நாள் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தும் சாத்தியங்கள் அதிகமுள்ளா நாளாகும். இந்தியப் படைகள் சிறிலங்காவை விட்டு வெளியேறிய பின்னர் விடுதலைப் புலிகள் திருமலை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் 1992 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் நாள் நடத்திய தாக்குதலில் 31 இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் கொல்லப்பட்டிருந்தனர்.
அதே நாள் இயக்கச்சி மற்றும் ஆணையிறவுப் பகுதியில் நடைபெற்ற அமுக்கவெடி தாக்குதலில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 4 பேர் காயமடைந்திருந்தனர்.
மூன்று வருடங்களின் பின்னர் ஜூலை 29 ஆம் நாள் 1995 ஆம் ஆண்டு மணலாற்றில் உள்ள படைமுகாம்களின் மீது விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலை நடத்தியிருந்தனர். எனினும் அது வெற்றி பெறவில்லை. ஆனால் அதற்கான கணக்குகளை பின்னர் முல்லைத்தீவு படைத்தளம் மீது நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகள் தீர்த்துக்கொண்டனர்.
தற்போது இந்தப் பகுதியை அவர்கள் வான்தாக்குதல் மற்றும் ஆழ ஊடுருவும் படையினரின் தாக்குதலில் இருந்து காத்து வருகின்றனர்.
வன்னிப்பகுதி முக்கிய களமுனையாக இருக்கும் போதும் யாழ். குடாநாட்டில் இருந்து படையினரை வெளியேற்றும் தமது பிரதான திட்டத்தையும் விடுதலைப் புலிகள் கைவிடவில்லை. மேலும் கிழக்கில் உள்ள பேராறு, கும்புறுப்பிட்டி, மணிராசகுளம், திரியாய் ஆகிய பகுதிகளில் விடுதலைப் புலிகள் ஊடுருவியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.