சிறிலங்காவில் தோன்றியுள்ள கொந்தளிப்பான நிலைமைகள் தொடர்பாக பிரித்தானியா கவனம் செலுத்தி வருகின்றது. மேலும் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்ததில் ஜெனீவாவில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடுகளுக்கு அமைய சிறிலங்கா அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் அமைதிப் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காதது தொடர்பாகவும் அது தனது கவலையை வெளியிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது பிரித்தானியாவின் வெளிநாட்டு மற்றும் அணிசேரா நாடுகளின் அமைச்சர் ஹிம் ஹாவல் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிறிலங்காவில் மீண்டும் அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்காக பிரித்தானியாவின் பிரதிநிதி ஒருவர் விரைவில் இந்தியாவிற்கு செல்ல உள்ளார். சிறிலங்காவின் படைகளை தவிர எந்த ஒரு ஆயுதக்குழுக்களும் ஆயுதங்களுடன் நடமாடுவதனை அல்லது நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை அரசாங்கம் முற்றாக தடுக்க வேண்டும். விடுதலைப் புலிகள் அரசாங்கப் படையினருக்கு எதிரான வன்முறைகளை கைவிட வேண்டும். இந்த நிபந்தனைகள் இதுவரை நிறைவு செய்யப்படவில்லை.
கடந்த வருடத்தில் இருந்து வன்முறைகள் அதிகளவில் அதிகரித்துச் செல்வதனை நாம் பார்க்கிறோம். நீதிக்குப்புறம்பான கொலைகள், காணாமல் போதல், துன்புறுத்தல்கள், துணை இராணுவக்குழுக்களின் வன்முறைகள் என்பன அங்கு பொதுவானவையாக மாறிவிட்டது.
இந்த வன்முறைகள் நம்பிக்கை அற்ற நிலையையும், இனப்பிளவுகளையும் தோற்றுவித்துள்ளன. அது மேலும் வன்முறைகளுக்கு வழிவகுத்துள்ளன. அப்பாவி மக்கள் தான் இதில் அவலங்களை சந்தித்துள்ளனர். மட்டக்களப்பில் 100,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், தினமும் நூற்றுக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
யாழ். குடாநாட்டில் காணாமல் போன மக்களின் முறைப்பாடுகள் 700-க்கும் அதிகமாக உள்ளது. இதில் 500 வரையான முறைப்பாடுகள் தீர்க்கப்படவில்லை.
விடுதலைப் புலிகள் தமது வன்முறைகளை கைவிட வேண்டும். பிரித்தானியாவில் திரட்டப்படும் நிதி போருக்கே ஊக்கமளிக்கிறது சமாதானத்திற்கு அல்ல. இதனை தடுப்பதற்கு நாம் எமது பாதுகாப்பு தரப்பினருடன் ஆலோசித்து வருகின்றோம்.
அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள அப்பாவி பொதுமக்கள் துணை இராணுவக் குழுக்களின் தாக்குதல்களுக்கு தொடர்ச்சியாக உள்ளாகி வருகின்றனர். இந்த துணை இராணுவக்குழுவான கருணா குழுவுடன் அரசாங்கத்துக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகின்றது.
நீதிக்குப் புறம்பான கொலைகள், கடத்தல்கள், இடம்பெயர்ந்த மக்களின் மீதான துன்புறுத்தல்கள், சிறார் படைச்சேர்ப்பு போன்றவற்றிற்கு கருணா குழுவே காரணம் என நாம் நம்புகின்றோம். கருணா குழுவினர் ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் படைச் சேர்ப்புக்கு எதிரான கொள்கைகளை மதிக்கிறார்களா என நாம் கவனமாக அவதானித்து வருகின்றோம். அவர்கள் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றனரா என நாம் பார்க்க விரும்புகிறோம்.
கருணா குழுவினர் மக்களின் மீதான எல்லா வகையான வன்முறைகளையும் கைவிட வேண்டும். கருணா குழுவினர், இந்த குற்றங்களை புரிவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதிப்பதனை ஏற்க முடியாது. அவர்கள் அமைதியான சிறிலங்காவை உருவாக்க விரும்பினால் எல்லா மக்களும், எல்லா கலாச்சாரங்களும் மதிக்கப்படுவதுடன், அவர்கள் மீதான பயங்கரவாதம், மனித உரிமை மீறல்கள், சித்திரைவதைகள் என்பனவற்றை யார் புரிந்தாலும் அதை நிறுத்த வேண்டும் என்றார் அவர்.
இந்த விவாதத்தில் கலந்து கொண்ட வெளிவிவகார அபிவிருத்தி அமைச்சரான ஹரித் தோமஸ் தெரிவித்ததாவது:
யாழ். குடாநாட்டின் நிலைமைகள் மோசமடைந்துள்ளன. எனவே அதற்கான கடல் மற்றும் தரைப்பாதைகள் எந்தவித முன்நிபந்தனைகளும் இன்றி நிரந்தரமாக திறக்கப்பட வேண்டும். மனிதாபிமானமான அத்தயாவசிய விநியோகங்களுக்கு ஏ-9 பதை அவசியமானது.
மோதல்களில் ஈடுபடும் தரப்புக்கள் இராணுவ வெற்றிகள் அமைதியை ஏற்படுத்துவதற்கு சாத்தியமற்றன எனவும் பிரச்சனையை தீர்ப்பதற்கான ஆதாரமாகாது எனவும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒரு செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். அதில் மனித உரிமைகள் மதிக்கப்படுவதுடன், கலாச்சார வேறுபாடும் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் மோதல்களை நிறுத்தி மீண்டும் பேச்சக்களை ஆரம்பிக்க வேண்டும் என்ற பிரித்தானியா அரசின் நிலைப்பாட்டின் அடிப்படையில் சிறிலங்காவிற்கான பிரித்தானியாவின் பிரதித் தூதுவர் விரைவில் விடுதலைப் புலிகளை சந்திக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்டுகின்றது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.