[ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2007]
"சிறிலங்கா அரசினால் கிழக்கு மாகாணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த பிரச்சாரங்களை கடந்த வாரம் இடம்பெற்ற மோட்டார் எறிகணைத் தாக்குதலின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்து விட்டனர்" என்று 'சண்டே ரைம்ஸ்' வார ஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றைய தனது ஆய்வில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
"கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் மணிக்கு 373 கி.மீ (201 நொட்ஸ்) வேகமுடைய தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செஸ்னா போரோன் C-55 ரக விமானம் மட்டக்களப்பில் உள்ள விமானப் படைத்தளத்தில் யு.என்.எச்.சி.ஆர் பிரதிநிதிகளை தரையிறக்கியது. ஆனால் அவர்கள் இறங்கிய சிறிது நேரத்தில் பலத்த சத்தத்துடன் நான்கு எறிகணைகள் அருகாமையில் வீழ்ந்து வெடித்தன.
அருகில் வீழ்ந்த ஒரு எறிகணையினால் விமானத்தின் இறக்கைப்பகுதி சிறு சேதமடைந்தது. மேலதிக சேதங்களை தடுப்பதற்காக விமானம் பாதுகாப்பு பரிசோதனைகள் கூட செய்யப்படாது அவசரமாக அம்பாறை நோக்கி கொண்டு செல்லப்பட்டது. அது திருத்த வேலைகளுக்காக தற்போது அம்பாறையில் தரித்து நிற்கின்றது.
இதனிடையே அமைச்சர் மகிந்த சமரசிங்க மற்றும் இராஜதந்திரிகள் ஆகியோரை ஏற்றிக்கொண்டு ஒரு எம்.ஐ-17 உலங்குவானூர்தியும், அதனைப் பின்தொடர்ந்து பெல் - 212 ரக உலங்குவானூர்தியும் காலை 7.30 மணியளவில் மட்டக்களப்பு நோக்கி பயணமாகின. இராஜதந்திரிகளும், அமைச்சரும், அரச அதிகாரிகளும் எம்.ஐ-17 ரக உலங்குவானூர்தியில் அமர்ந்திருந்தனர்.
இந்தப் பயணம் கிழக்கு மாகாணத்தின் களநிலவரம் தொடர்பாக இராஜதந்திரிகளுக்கு நல்லதொரு அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் என மகிந்த சமரசிங்க நம்பியிருந்தார். காலை 8.30 மணியளவில் மட்டக்களப்பின் வான்வெளியை அடைந்த இரு உலங்குவானூர்திகளின் தரையிறக்கத்தையும் கட்டுப்பாட்டுக் கோபுர அதிகாரிகள் நிறுத்தி வைத்திருந்தனர்.
எனவே வான்வெளியில் இரு உலங்குவானூர்திகளும் வட்டமிட்டபடி இருந்தன. அப்போது, அமைச்சர் மகிந்த சமரசிங்க அருகில் அமர்ந்திருந்த வடக்கு - கிழக்கு மாகாண ஆளுனர் மொகான் விஜயவிக்கிரமவிடம் நாம் இறங்கும் இடத்தை தவறவிட்டு விட்டோமா? எனக் கேட்க எனக்கும் அதுதான் குழப்பமாக உள்ளதாக அவர் பதிலளித்திருந்தார்.
25 நிமிடங்களின் பின்னர் எம்.ஐ - 17 உலங்குவானூர்திக்கு விமானப்படைத் தளத்தில் இருந்து இரு கி.மீ தொலைவில் உள்ள வெபர் விளையாட்டு மைதானத்தில் தரையிறங்க அனுமதி கிடைத்தது. 8.55 மணிக்கு தரையிறங்கிய உலங்குவானூர்தியில் இருந்து அமைச்சர், வடக்கு - கிழக்கு மாகாண ஆளுநர், அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலிய தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று அதிகாரிகள் மற்றும் இரு படையினர் ஆகியோர் இறங்கிய நிலையில் பாரிய சத்தங்களுடன் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின.
எறிகணைகள் வீழ்வதாக சிறப்பு அதிரடிப்படையினர் கூச்சலிட்டனர். எல்லோரும் சிதறி ஓடினார்கள். அருகில் இருந்த பவள் கவச வாகனத்திற்குள் எற எத்தனித்தனர். ஒரு சமயத்தில் அமைச்சர் மகிந்த சமரசிங்கவின் வேட்டி தடக்கி அவர் கீழே வீழ்ந்து விட்டார். எனினும் ஜப்பானிய தூதுவர் மகிந்த சமரசிங்க விழாமல் தடுத்து கவச வாகனத்தில் ஏற துணை புரிந்தார்.
இயந்திரத்தை நிறுத்தாது வைத்திருந்த உலங்குவானூர்தியின் ஓட்டி மிகுதியான பயணிகளை இறங்கவேண்டாம் என உரத்த சத்தத்தில் கூச்சலிட்டதுடன் உலங்குவானூர்தியை மேலெழுப்பி மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்த பெல் - 212 உலங்குவானூர்தியுடன் 40 கி.மீ தொலைவில் உள்ள வாழைச்சேனை முகாமுக்கு சென்றனர்.
தரையிறங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் வாகனங்களில் ஏறிய போதும் ஜேர்மன் மற்றும் இத்தாலிய தூதுவர்களை காணவில்லை. அவர்கள் காயமடைந்ததாக செய்திகள் பரவின. பின்னர் தலையில் சிறு காயமடைந்த இத்தாலிய தூதுவருடன் ஜேர்மன் தூதுவர் வந்து சேர்ந்தார்.
இந்த தகவல்களை முப்படைகளின் பிரதம அதிகாரியான ஏயார் மார்சல் டொனால்ட் பெரேரா அரச தலைவரின் ஆலோசகரான பசில் ராஜபக்சவிற்கு தெரியப்படுத்தினார். பசில் ராஜபக்ச உடனடியாக அந்த தகவலை சீனாவில் உள்ள அரச தலைவர் மகிந்தவிற்கு தெரியப்படுத்தினார். மகிந்த ராஜபக்ச இந்த சம்பவம் இடம்பெற்றது தொடர்பாக மிகுந்த ஆத்திரமடைந்தார்.
பின்னர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்கா ஆகியோரை தொடர்பு கொண்ட பசில் ராஜபக்ச, இராஜதந்திரிகள் பாதுகாப்பாக திரும்புவதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டிருந்தார்.
எம்.ஐ-17 உலங்குவானூர்தி மேலெழுந்த சில நிமிடங்களில் மேலும் பல எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. அதில் ஒன்று உலங்குவானூர்தி தரித்து நின்ற இடத்தில் குறி தவறாது வீழ்ந்து வெடித்தது. எனவே உலங்குவானூர்தியின் ஓட்டி சாதூர்யமான முடிவு உலங்குவானூர்தியையும் இராஜதந்திரிகளையும் காப்பாற்றியது.
எறிகணைகளின் புகைகள் அடங்குவதற்கு முன்னர் படையினரால் தொப்பிக்கல பகுதியை தவிர கிழக்கின் மிகுதிப் பகுதிகள் விடுவிக்கப்பட்டு விட்டன என்ற பிரச்சாரத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டு விட்டன.
மட்டக்களப்பின் இதயப்பகுதியில் இடம்பெற்ற தாக்குதலே இதற்கு காரணம். கிழக்கில் அமைதி திரும்பிவிட்டது. வழமையான அபிவிருத்திப் பணிகள் நடைபெறுகின்றன என உலகின் முன்னணி நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை அழைத்துச் சென்று காண்பிக்க முயன்ற வேளையில் இந்த அனர்த்தம் இடம்பெற்று விட்டது.
சில நூறு யார் தூரத்தில் இருந்த கெரில்லாக்கள் இந்த தாக்குதலை ஒருங்கிணைத்துள்ளனர். எறிகணைகள் வீழ்வதை அவதானித்தாலே அதனை குறித்த இலக்கை நோக்கி ஒருங்கிணைக்க முடியும். சில நிமிடங்களில் மட்டக்களப்பு செய்தி உலகெங்கும் பரவிவிட்டது.
விடுதலைப் புலிகளே இது தொடர்பான பிரச்சார தொடர்புகளை முதலில் முன்னெடுத்தவர்கள் ஆவர். சம்பவம் இடம்பெற்ற 3 மணிநேரத்தில் விடுதலைப் புலிகளின் அறிக்கை பிற்பகல் 12.36 மணியளவில் வெளிவந்து விட்டது.
அதில் சம்பவத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் மாட்டின் டின் கடோகாஹ், விடுதலைப் புலிகளின் ஐக்கிய நாடுகள் சபைக்கான அதிகாரியான எம்.பாவரசனை தொடர்பு கொண்டு நிலைமையை தெரிவித்ததால் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் விடுதலைப் புலிகளின் உடனடியான நடவடிக்கையால் தாக்குதல் நிறுத்தப்பட்டது குறித்து மாட்டின் பாவரசனுக்கு தனது நன்றியை தெரிவித்ததுடன், இந்த பயணம் தொடர்பாக முன்னர் விடுதலைப் புலிகளுக்கு அறிவிக்காத தமது தவறையும் ஒத்துக்கொண்டிருந்தார்.
அரச இயந்திரம் விடுதலைப் புலிகளை விட விரைவாக இயங்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அதன் அறிக்கை 2.17 மணிக்கே வெளிவந்தது. அவர்களின் தொலைத் தொடர்பு வசதிகளில் பாரிய பிரச்சனைகள் இருந்துள்ளன. ஆனால் இப்படியான மிகப்பிந்திய பிரச்சாரங்களால் அரசின் இயங்குதன்மை இழக்கப்படுகின்றது.
இராஜதந்திரிகளின் மட்டக்களப்பு பயணம் விடுதலைப் புலிகளுக்கு தெரிந்து தான் தாக்குதலை நடத்தியதாக அரச தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் இராஜதந்திரிகளை குறிவைத்து விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தியதாக தான் நம்பவில்லை எனவும், எனினும் விடுதலைப் புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொள்வதாகவும் இணைத்தலைமை நாடுகளின் தலைவரும் அமெரிக்கத் தூதுவருமான றொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
நான் அங்குள்ள உண்மையான நிலையை அறிந்துள்ளேன். ஊடகத்துறையின் வெற்றிகளுக்கும், இராணுவ வெற்றிகளுக்கும், உண்மை நிலைமைக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொண்டேன் என தனது பெயரை குறிப்பிட விரும்பாத இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வவுணதீவுப்பகுதி அல்லது எருமைத்தீவில் இருந்தே வாகனங்களில் பொருத்தப்பட்ட 81 மி.மீ மோட்டார்கள் எறிகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
துருப்புக்காவி வாகனங்கள் மூலம் வாழைச்சேனை முகாமுக்கு வேகமாக கொண்டு செல்லப்பட்ட இராஜதந்திரிகளுக்கு வாகரையை கைப்பற்றியது தொடர்பாக ஒரு உற்சாகமான உரையை வழங்குமாறு அமைச்சர் 23 ஆம் படைப்பிரிவுத் தளபதி தயா ரட்னாயக்காவை கேட்டுக்கொண்டார். அதன் பின்னர் எல்லோரும் கொழும்புக்கு திரும்பினர்.
முன்னணி நாடுகளின் எல்லா தூதுவர்களும் கிழக்கு மாகாணம் தொடர்பாக சிறிலங்கா அரசின் பிரச்சாரங்களில் உள்ள தவறுகளை தமது நாடுகளுக்கு நிச்சயமாக தெரிவிப்பார்கள். மேலும் தம்மை அழைத்துச் சென்றவர்கள் தமது உயிருக்கு உரிய பாதுகாப்பை அளிக்கத் தவறிவிட்டதையும் அவர்கள் எடுத்துரைப்பர்.
அவர்கள் தமது அதிகாரிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் உண்மையை மறைக்கப்போவதில்லை. எனவே சில மோட்டார் எறிகணைகளை பயன்படுத்தி அரசின் நம்பகத்தன்மைக்கு சவால் விட்டதுடன் அதில் விடுதலைப் புலிகள் வெற்றிபெற்றும் விட்டார்கள்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதினம்.கொம்.
Sunday, March 04, 2007
அரசின் பிரச்சாரத்தை சில எறிகணைகள் மூலம் விடுதலைப் புலிகள் முறியடித்து விட்டனர்: இக்பால் அத்தாஸ்.
Sunday, March 04, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.