Friday, February 16, 2007

புலிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்போர் யாரென்பதை விரைவில் அம்பலப்படுத்துவோம்.

* ஸ்ரீபதி சூரியாராச்சி கூறுகிறார்

விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை எவர் வைத்திருக்கின்றனர் என்ற உண்மையை விரைவில் அம்பலப்படுத்துவோமென தெரிவிக்கும் முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி, கிளிநொச்சி, முல்லைத்தீவுப் புலிகளின் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தாது கிழக்கில் நடத்தப்படும் `புதுமைமிக்க யுத்தம்' என்ன என்பதையும் விரைவில் வீடியோத் திரையில் காண்பிப்போமென்றும் தெரிவித்தார்.

பாராளுமன்றக் குழு அறையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே ஸ்ரீபதி சூரியாராச்சி எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் புதுமையான யுத்தம் நடத்தப்படுகிறது. பாலைவனம் போன்ற பிரதேசங்களில் தாக்குதல்களை நடத்திவிட்டு புலிகள் பின்னோக்கி ஓடிவிட்டார்களென்ற பிரசாரத்தை அரசாங்கம் மேற்கொள்கிறது.

உண்மையிலேயே கிளிநொச்சி, முல்லைத்தீவுப் புலிகளின் தளங்கள் மீதே தாக்குதல்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால், அதனைச் செய்யாது மேற்கண்டவாறான தாக்குதல்களை மேற்கொண்டு தென்பகுதியில் ஒரு மாயையை ஏற்படுத்தியுள்ளனர். அது ஏன்? எதற்காக? என்ற உண்மையை விரைவில் வெளியிடுவோம்.

அத்தோடு, புலிகளுடன் யார், யார்நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கின்றனறென்பதையும் அம்பலப்படுத்துவோம். எதிர்வரும் 22 ஆம் திகதிக்குப் பின்னர் கருணாவை அரசதரப்பினரே கொலை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை.

நாட்டைச் சீரழித்து மக்கள் எதிர்பார்ப்புகளை சிதறடித்து ஸ்திரமில்லா நிலைமையை உருவாக்கி நெருக்கடியில் தள்ளிய பொறுப்பை ஜனாதிபதியே ஏற்க வேண்டும்.

நாட்டின் மொத்த செலவின் 60 வீதமான பொறுப்புகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது பொறுப்பின் கீழ் வைத்துள்ளார். உலகில் எங்கும் இதுபோன்ற நிலைமை இல்லை.

ஜனாதிபதி என்ற தனிநபரின் கீழ் 7 அமைச்சுகள் ஒன்றாக இணைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளதோடு, வெளிநாட்டு உதவிகளுடன் செயல்படும் 22 திட்டங்கள் உட்பட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்படாத 27 நிறுவனங்களும் உள்ளன. உலகில் இவ்வாறானதொரு நிலைமை எங்கும் இல்லை.

நான் அமைச்சுப் பொறுப்பை ஏற்றிருந்த நிறுவனங்களின் ஒன்றான தனியார்மயப்படுத்தலைத் தடுக்கும் பேர்க் நிறுவனத்தின் கீழுள்ள ஹிங்குரான சீனித் தொழிற்சாலையை எனக்குத் தெரியாமல் கேள்விக் கோரலை பசில் ராஜபக்ஷவே நடத்தினார்.

அவசரகால சட்டத்திற்கு வாக்களிக்கவில்லையென எம் மீது குற்றம்சாட்டுவதில் உண்மையில்லை. அன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அலரிமாளிகைக்கு வரச்சொன்ன ஜனாதிபதி பல மணிநேரம் கழித்து அதனை இரத்துச் செய்தார். இதனால், மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு தாமதமானது. இதுதான் உண்மை. அதேநேரம், 27 அரசாங்க உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

எமது கட்சியின் நிறைவேற்றுக் குழுவில் எந்தக் கருத்தையும் தெரிவிக்கும் உரிமை ஜனாதிபதிக்கு உண்டு. ஆனால், அதனை சேறு பூச பயன்படுத்துவது பிழையான செயலாகும்.

எமது தலைவரை கோதாபயவோ, பசில் ராஜபக்ஷவோ ஜனாதிபதியாக்கவில்லை என்பது சிந்திக்கப்பட வேண்டும். தற்போது ஜனாதிபதியின் உரைகள் பலவீனமாகிப் போய்விட்டன. ஒருபோதும் அவர் தலைமையில் அமைச்சர் பதவியை பெறமாட்டேனென்றும் ஸ்ரீபதி சூரியாரச்சி எம்.பி. தெரிவித்தார்.