சிறீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எவர் மீதும் ஒழுக்காற்ற நடவடிக்கை எடுக்க தான் தயாராக இருப்பதாக சிறீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் சிறீலங்கா ஜனாதிபதியுமான மகஜிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்
சுதந்திர கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களுக்கு நியமன கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்
கட்சியை பிளவு படுத்தி அதில் அரசியல் இலாபம் தேட சிலர் முற்படுவதாகவும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தான் தயங்கப் போவதில்லை என்றும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்
ஏற்கனவே கட்சியுடன் முரண்பட்டு கட்சியை விட்டு வெளியேறியவர்கள் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை நினைவு படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்
தான் சிறீமாவோபண்டாரநாயக்காவோ அல்லது எஸ்.டபிள்.யு.ஆர்.டி பண்டாரநயக்காவோ சந்திரிகாவோ அல்ல என்று கூறிய மகிந்த ராஜபக்ச தான் மடமோலன மகிந்த என்பதை மீண்டும் உறுதிப்படுத்த விரும்புவதாகவும் கூறியுள்ளார்
சிறீலங்காவின் புதிய அமைச்சரவை மாற்றத்தை அடுத்து அதிருப்தி அடைந்துள்ள அமைச்சர்கள் மங்கள சமரவீர அனுராபண்டாரநயக்கா மற்றும் சிறீபதி சூரியாராட்சி போன்றவர்கள் மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான அணி ஒன்றை திரட்டி வரும் நிலையில் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்துக்கள் முறுகல் நிலையை மேலும் தீவிரமாக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது






