Wednesday, February 14, 2007

அனுராவை மீண்டும் அமைச்சரவையில் இணைக்க திட்டம்.

[புதன்கிழமை, 14 பெப்ரவரி 2007]

சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் பதவி நீக்கப்பட்ட தேசிய பாரம்பரிய அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவை நேருக்கு நேர் சந்தித்து உரையாடி மீண்டும் அமைச்சரவையில் ஒரு உயர்ந்த பதவியை அவருக்கு வழங்கி அமைச்சரவையில் அவரை இணைத்து கொள்ள மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுராவுக்கு வெளிவிவகாரத்துறை அல்லது துறைமுகங்கள் சிவில் விமானப் போக்குவரத்துத்துறை வழங்கப்படலாம் எனவும் அனுராவின் பாதுகாப்புக்களும், அவருக்கு வழங்கப்பட்டிருந்த வாகனங்களும் விலக்கப்பட்ட பின்னர் இச்சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

அனுராவுக்கு முன்னர் 100 படையினரும், குண்டுதுளைக்க முடியாத வாகனமும் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் தற்போது அந்த வாகனம் மீளப் பெறப்பட்டுள்ளதுடன் இரு காவல்துறை உறுப்பினர்களே பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அனுரா, தனது பாதுகாப்பை விலக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், தனது பாதுகாப்பு திட்டமிட்டே விலக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த கோத்தபாய ராஜபக்ச, தானும் அரசியல் வட்டாரங்களுமே பாதுகாப்பை விலக்கியதற்கு காரணம் எனக் கூறியதுடன். அதனால் பண்டாரநாயக்க குடும்பத்திற்கு ஏதேனும் ஆபத்துக்கள் நேர்ந்தால் தான் அதற்கு பெறுப்பேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு கிடைத்த உத்தரவுகளையே நிறைவேற்றியதாகவும், எனினும் பாதுகாப்பை மீள வழங்கவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளதுடன் அனுராவுக்கான பாதுகாப்புக்கள் விரைவில் மீள வழங்கப்படலாம் எனவும் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அனுராவுக்கு உயர் பதவியை வழங்குவதன் மூலம் அனுரா பண்டாரநாயக்க, மங்கள சமரவீர, சிறீபதி சூரியராச்சி ஆகியோரின் கூட்டணியை உடைப்பது தான் அரசின் திட்டம் என அரசின் உள்ளகத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.

ஆதாரம்:புதினம்