Monday, January 29, 2007

யாழில் ஊரடங்கு வேளையில் நடமாடுவோரை கைதுசெய்யுமாறு.....


யாழ். குடாநாட்டில் இரவு வேளையில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நேரத்தில் நடமாடுபவர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவேண்டும். இதற்கான பணிப்புரையை பிரதம நீதியரசர் சரத் என். சில்வா பலாலி படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறிக்கு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நேரத்தில் கொள்ளைகள், கொலைகள், கைதுகள், ஆட்கடத்தல் போன்ற சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுவதாகத் தனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும்
அத்தகைய நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு விதிகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்தி இந்த நடவடிக்கையில் ஈடுபடுபவர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தமது அறிவுறுத்தலில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குடாநாட்டில் அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் ஆகியவற்றைத் தடுக்கும் பொருட்டு சகல கிராமசேவையாளர் பிரிவுகளிலும் விழிப்புக்குழுக்களை அமைக்கும் படி யாழ். அரச அதிபருக்கு பிரதம நீதியரசர் உத்தரவிட்டுள்ளார்.

விழிப்புக்குழுவுக்கு பொலிஸாரும் படையினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பிரதம நீதியரசர் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்குப் பணித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து யாழ். நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதில் யாழ். மாவட்டத்தில் பணிபுரியும் நீதிபதிகளும், அரச அதிபரும் கலந்துகொண்டனர்.
விழிப்புக் குழுக்களைக் கிராம சேவையாளர்கள் ஊடாக அமைப்பது குறித்து அங்கு விரிவாக ஆராயப்பட்டது.