Friday, September 29, 2006

மட்டக்களப்பில் எறிகணை மோதல் 3 படையினர் பலி! இரு படையினர் உட்பட 8 பேர் படுகாயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர்க்கும் விடுதலை புலிகளுக்குமிடையில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 5.00 மணியளவில் கடும் ஆட்லறி மற்றும் மோட்டார் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலினால் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதோடு மேலும் இரு இராணுவத்தினர் படுகாயமடைந்த நிலையில் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஆறு பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளார்கள் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான வவுணதீவு காயான்மடு பகுதியை சேர்ந்த தர்சினி வயது 9 இந்த சிறுமி ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. கஜேந்திரன் வயது 30, கந்தசாமி வயது 30 , இவர்கள் மூவரும் மட்டு நகர்ப்பகுதிக்கு வரமுடியாமல் விடுதலை புலிகளின் மருத்துவ மனையயில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மற்றும் கொம்மாதுறை செங்கலடி பகுதியை சேர்ந்த பாக்கியராசா கிருபையம்மா வயது 56, பொன்னுதம்பி சிவஞானசுந்தரம் வயது 53, திருமதி லீலாபதி சிவஞானசுந்தரம் வயது 53, படுகாயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இத்தாக்குதல் சுமார் இரு மணி நேரமாக நீடித்துள்ளது. தற்போதும் தொடர்ந்து ஆட்லறி தாக்குதல் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.