Saturday, April 04, 2015

இந்தியப் பிரதமர் மீனவ பிரச்சினைகளில் தலையிட வேண்டும்: ராமதாஸ், கருணாநிதி வலியுறுத்து

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலுள்ள வங்ககடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இருநாட்டு மீனவர்களுக்கும் உரிமையுண்டு என்பதை இந்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இன்றைய தினம் இந்திய ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பில் 40 வருடங்களுக்கும் மேலாக பிரச்சினைகள் நீடித்து வருகின்றன.
கச்சதீவை இலங்கைக்கு தாரைவார்த்த பின்னரே இந்த பிரச்சினை மிகவும் தீவிரமடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியதுடன்,
இதற்கு தீர்வு காணும் வகையில் கடந்த 24ம் திகதி சென்னையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது வருடமொன்றிற்கு 83 நாட்கள் மாத்திரம் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கு அனுமதியளிக்க முடியாது என தெரிவித்து எல்லை தாண்டும் மீனவர்களை கைது செய்யுமாறு நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் கடற்படையினருக்கு உத்தரவிட்டிருந்தார். 
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக நேற்றைய தினம் 33 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினராலும், 6 இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினராலும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையிலேயே இருநாட்டு மீனவர்களுக்கும் வங்ககடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு உரிமையுண்டு என இந்திய அரசாங்கம் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வலியுறுத்த வேண்டும் எனவும், 
அவ்வாறு வலியுறுத்தும் சந்தர்ப்பத்தில் அவர்களால் மறுப்பு தெரிவிக்க முடியாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
இதேவேளை இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இடையில் எத்தனை தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் இந்த பிரச்சினை தொடர்கதையாகவே அமைந்துள்ளது என திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். 
இவ்வாறு தொடர்கதையாக அமைந்துள்ள மீனவ பிரச்சினைக்கு இந்திய மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து இலங்கை ஜனாதிபதியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும், 
இந்திய மத்திய அரசு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வழிவகைகளுக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார். 
இந்த முயற்சிகளை இந்திய அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளாமல் அசமந்த போக்கில் செயற்படுவது தமிழக மீனவர்களை மிகவும் வேதனைக்குள் தள்ளியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 
அத்துடன் இந்திய அரசாங்கம் முயற்சித்தால் ஐ.நா அமைப்பினால் உருவாக்கப்பட்ட சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டு இந்த உரிமையை நிலைநிறுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார். 
இவ்வாறு செய்யும் போது இருநாட்டு மீனவ பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணமுடியும் எனவும், இலங்கையை ஒரு வழிக்கு கொண்டு வரமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா கருணை காட்டாமல் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வங்ககடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட சட்டபூர்வமான உரிமையை பெற்று தர முனைய வேண்டும் என அவர் மேலும் கேட்டு கொண்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.