ஆரம்பத்திலேயே எங்க குடும்பம் ரொம்ப வசதியாக இருந்தது, ரொம்பப் பணக்காரக் குடும்பம். அப்போது இருந்த அந்தச் சொத்து அப்படியே நிலைச்சு இருந்திருந்தால், எங்க அம்மாவும் நடிக்க வந்திருக்க வேண்டாம், நானும் சினிமாவில் நடிக்க வந்திருக்க வேண்டாம்! இப்படிச் சொன்னவர் ஜெயலலிதா!
தங்களின் அரசியல் வளர்ச்சியை அருகில் இருந்து பார்க்காத உங்களது தாயாரின் நினைவுகளைச் சொல்லுங்கள்...’ என ஒருமுறை ஜெயலலிதாவிடம் கேட்டபோது,
அம்மா இருந்திருந்தால், இந்தக் கேள்விக்கே இடம் இருந்திருக்காது. ஏனென்றால், என்னை அவர் அரசியலில் நுழைய அனுமதித்திருக்கவே மாட்டார்! என்றார்.
குடும்பச் சூழ்நிலை காரணமாக நடிக்க வந்து, தாய் சந்தியாவின் மரணத்துக்குப் பின்னால் அரசியலுக்கு வந்து, 'கூடா நட்பு கேடாய் முடியும்’ என்ற பழமொழிக்கு உதாரணமாக பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சென்றுவிட்டார் ஜெயலலிதா!
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்புரத்தில் 'ஜெய விலாஸ்’, 'லலித விலாஸ்’ எனப் பெரும் பங்களாக்களில் அவரது மூதாதையர் வாழ்ந்தார்கள். அதன் நினைவாகத்தான் 'ஜெயலலிதா’ என இவருக்குப் பெயர் சூட்டினார்கள். இன்று பரப்பன அக்ரஹாரா சிறைக்கும், 'ஜெயலலிதா இருக்கும் சிறை’ என்ற பாரம்பர்யம் தொற்றிக்கொண்டுவிட்டது.
காலம் வழங்கிய அருட்கொடையான ஆட்சி அதிகாரத்தை, அதன் அருமை தெரியாமல் விளையாட்டுத்தனமாக உருட்டி விளையாண்டதன் விளைவு... வினையாகி, இன்று இருட்டுச் சிறைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டது ஜெயலலிதாவை!
'எனக்கு என்ன குடும்பமா... குட்டியா? தமிழக மக்கள்தான் என் குடும்பம்’ எனச் சொல்லிக்கொண்ட ஜெயலலிதா, யதார்த்தத்தில் அப்படி வாழவில்லை என்பதற்குச் சாட்சியே இந்த 66 கோடி ரூபாய். இந்த 66 கோடியின் மதிப்பை 1991-ம் ஆண்டுக் கணக்கின்படி மதிப்பிட வேண்டும். 'இந்தச் சொத்துக்களின் இன்றைய மதிப்பு 3,600 கோடி ரூபாய்க்கும் மேல்’ என அரசு வழக்குரைஞர் பவானி சிங், சிறப்பு நீதிமன்றத்தில் பதிவுசெய்துள்ளார்.
ஓர் அரசு ஊழியர் தன்னுடைய ஒவ்வொரு பைசாவின் வரவுக்கும் கணக்குக் காட்ட வேண்டும் என்ற, மிகச் சாதாரணமான வழிமுறையைக்கூட உதாசீனம் செய்துவிட்டு நினைத்தை எல்லாம் வளைத்து வசப்படுத்தி ஆண்டிருக்கிறார்கள்.
2013 அக்டோபர் 31-ம் நாள், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக ஜான் மைக்கேல் டி.குன்ஹா நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் வழக்குரைஞர் குமாரைப் பார்த்து, 'இது என்ன மாதிரியான வழக்கு? சுருக்கமாகச் சொல்லுங்கள்’ என்று கேட்டார் நீதிபதி.
பொதுவாக இந்த மாதிரியான இயல்பான தன்மையை நீதிபதிகளிடம் எதிர்பார்க்க முடியாது. மேலும், அரசு வழக்குரைஞர்களிடம்தான் முதலில் கேட்பார்கள். ஆனால் குன்ஹா, எதிர்த் தரப்பில் இருந்து தொடங்கினார். குமார் மொத்தக் கதையையும் சொல்லிவிட்டு, 'இப்படி பல குளறுபடிகள் உள்ள வழக்கு இது’ என முடித்தார்.
உடனே நீதிபதி, 'எல்லா வழக்குகளிலும் குளறுபடி இருக்கத்தான் செய்யும். அதைக் களைவதுதான் நம்முடைய பொறுப்பு’ என்றார். வார்த்தையைக் கவனியுங்கள். 'நீதிமன்றத்தின் பொறுப்பு’ எனப் பிரித்துச் சொல்லாமல், 'நம்முடைய பொறுப்பு’ என ஜெயலலிதா தரப்பையும் தன்னோடு சேர்த்துக்கொண்டார்.
இந்த வழக்கில் அரசியல் பின்புலங்கள் இருப்பதாக குமார் வாதிட்டபோது, கொஞ்சம் குரலை உயர்த்தினார் நீதிபதி. 'யாரும் இந்த நீதிமன்றத்தில் உணர்ச்சிவசப்பட வேண்டாம். அனைவரும் சேர்ந்தே கோப்புகளைப் பார்த்து நீதியை நிலைநாட்டுவோம்’ என்று சொன்னார்.
பொதுவாக, 'எந்த வழக்காக இருந்தாலும் பேப்பர் பேசும்’ என்பார்கள். அந்த மாதிரி, தன் முன்னால் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் முடிவுகள் எடுப்பேன் என்பதைச் சொல்லாமல் சொன்னார் நீதிபதி.
மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் இந்த வழக்கே நடந்தது!
1. 1991-96 வரை முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கும் அதிகப்படியான சொத்துக்களைச் சேர்த்துள்ளார். அவற்றை 32 நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.
2. ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் சேர்ந்து கூட்டுச் சதி செய்துள்ளார்கள். இது இந்தியத் தண்டனைச் சட்டம் 109 (குற்றம் செய்யத் துணிதல்), 120-பி (கூட்டுச் சதி) ஆகிய பிரிவுகளின்படி குற்றம்.
3. 66 கோடி ரூபாய்க்கு சரியான கணக்கு ஒப்படைக்காததால், ஊழல் தடுப்புச் சட்டம் 13(1) இ பிரிவின்படி குற்றம் செய்தவர்கள் ஆகிறார்கள்.
- இந்தக் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டுவிட்டது. குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதாகச் சொன்ன நீதிபதி, வழங்கிய தண்டனைதான் ஜெயலலிதாவுக்கு மட்டும் அல்ல, ஊழல் அரசியல்வாதிகள் அனைவருக்குமே அடிவயிற்றைக் கலக்கிவிட்டது.
ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதித்ததுடன், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என அளித்துள்ள தீர்ப்பு, பொதுச் சொத்தை தன் சொத்தாகச் சுருட்டும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை.
சில நாட்களுக்கு முன் வட மாவட்டம் ஒன்றில் தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் பேசிய முன்னாள் அமைச்சர் ஒருவர், 'ஜெயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தவுடன் யாரும் பட்டாசு எல்லாம் வெடிக்க வேண்டியது இல்லை. வீட்டுல அமைதியா இருங்க’ என்றாராம்.
அவர் மீதும் சொத்துக்குவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நடக்கிறது. அதாவது, ஊழல் அரசியல்வாதிகள் எல்லோரையுமே ரத்தம் உறைய வைத்துள்ளது இந்தத் தீர்ப்பு.
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள், அப்பீல் போய்விட்டு, அந்த வழக்கையே முடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு, தன் வாழ்நாள் முழுக்க அதே குற்றத்தைத் தொடர்ந்து செய்துவரும் நிலைக்கு, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்தது. குற்ற வழக்கில் தண்டனை தரப்பட்டதும் பதவி போய்விடும் என்பதே அந்த உத்தரவு.
அதேபோல், ஒரு குற்ற வழக்கை எவ்வளவு விரைந்து முடிக்க வேண்டும் என்பதையும் நீதிபதி குன்ஹா காட்டிவிட்டார். வெறும் சிறைத் தண்டனைதானே என ஜாமீன் வாங்கிவிட்டு வீட்டில் ஹாயாக இருந்துவிடக் கூடாது என்பதால், மொத்தச் சொத்துக்களையும் பறிமுதல் செய்யவும், சம்பாதித்த சொத்தைவிட ஒரு மடங்கு அதிகமாக அபராதம் விதிக்கவும் வழிகாட்டி இருக்கிறார் குன்ஹா.
எடியூரப்பாக்களையும், ரெட்டி சகோதரர்களையும் கொண்ட கர்நாடக மாநிலத்தில் இருந்து நீதி, நேர்மை, நியாயத்துக்கு ஆதரவான குரலாக நீதிபதி குன்ஹா உயர்ந்து நிற்கிறார்.
திருமலைப்பிள்ளை வீட்டில், தன் தலையணைக்கு அடியில், 100 ரூபாயை வைத்திருந்த பெருந்தலைவர் காமராஜரையும், நுங்கம்பாக்கம் வங்கியில் 5,000 ரூபாயை வைத்திருந்த பேரறிஞர் அண்ணாவையும் கொண்ட தமிழகத்தில் இருந்து, ஊழல் வழக்குக்காக முதலமைச்சர் பதவியில் இருந்தபடியே சிறைக்குப் போன அவமானம் ஜெயலலிதாவால் நேர்ந்துள்ளது.
இந்தியாவில் இனி ஊழல் வழக்குகளில் தண்டனை பெறும் ஒவ்வோர் அரசியல்வாதிக்கும் முன்னதாக ஜெயலலிதாவின் பெயர் உச்சரிக்கப்படும். அந்துலேவை அவரது மாநிலத்துக்காரர்களே மறந்துபோயிருப்பார்கள். ஆனால், அரசியல்வாதிகளின் ஊழல் வழக்குகள் பேசப்படும் போதெல்லாம் அந்துலேவின் வழக்கும் பேசப்படுவதைப்போல ஜெயலலிதாவும் இனி நினைக்கப்படுவார்.
சிறுவயதில் தந்தையை இழந்து, வளர்ந்து நின்றபோது தாயை இழந்து, வழி சொல்லத் தேவையான போது அண்ணனை இழந்து, அரசியல் பாதை தொடங்கிய போது குருவான எம்.ஜி.ஆரை இழந்து தனியாக இருந்த ஜெயலலிதா, இப்போது பதவியை, மரியாதையை, நிம்மதியை இழந்து நிற்கிறார்.
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் அந்தத் தண்டனை காலம் முடிந்து, ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. அப்படிப் பார்த்தால் 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது. அப்படியானால் ஜெயலலிதா இனி தேர்தலில் பங்கேற்பதே சிரமம்தான்.
கர்நாடக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் விடுதலை பெற்று வெளியில் வந்தால்தான், பத்தாண்டுகளுக்குள் தேர்தலில் போட்டியிடவே முடியும். ஒருவேளை அப்படி எதுவும் நடக்காத பட்சத்தில், அடுத்த பத்தாண்டுகளுக்கு அ.தி.மு.க., ஆட்சியில் தொடர்ந்தாலும் ஜெயலலிதா வெளியில் இருந்து அதிகாரம் செய்ய முடியுமே தவிர, அதிகாரத்தை அவர் நேரடியாகச் சுவைக்க முடியாது. இது அவரை மனரீதியாகவும் பாதிக்கச் செய்யும்.
இந்தச் சட்ட, நீதிமன்ற நடைமுறைகள் சாதாரணமாக நடந்தாலே இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிடும். ஊழல் வழக்குகளுக்கு எதிராக நீதிமன்றங்கள் எப்போதும் சாட்டையைச் சுழற்றி வரும் நிலையில், ஜெயலலிதா முழுமையாக வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவது அசாதாரணமான விஷயமே.
இவை அனைத்தும் கர்நாடக மாநிலம் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் காலதாமதங்கள் ஏகத்துக்கும் அதிகரிக்கும். அரசியலில் அபார வெற்றிக்குப் பிறகு, மிகப் பெரிய வாழ்க்கைத் தோல்வியை அடைந்துவிட்டார்.
ஜெயலலிதா நினைத்த வாழ்க்கை இதுதானா?
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.