Thursday, March 24, 2011

வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தில் இந்தியா யுத்தத்தை நிறுத்தக் கோரியும் ஜனாதிபதி மஹிந்த அதனை நிராகரித்திருந்தார்

மிக விரைவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை அடுத்து வரும் இரண்டொரு நாட்களுக்குள் வெளியிடுவார் என்று இந்தியா எதிர்பார்த்திருந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜுபக்ஷ அதனை மேற்கொள்ளாது தொடர்ந்தும் விடுதலைப் புலிகளின் தலைமையை குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்க வைத்து யுத்தத்தை முன்கொண்டு செல்வதிலேயே ஆர்வம் காட்டினார் என வி்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் கடைசிக்கட்டத்தில் போர்நிறுத்தமொன்று தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீது இந்தியா அழுத்தங்களைப் பிரயோகித்ததாக விக்கிலீக்ஸ் செய்திகளை வெளியிட்டுள்ளது. அன்றைய காலகட்டத்தில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதராலயத்தில் பிரதான அதிகாரியாக கடமையாற்றிய பீட்டர் பர்லே தனது தகவல் குறிப்பின் மூலம் இராஜாங்கத் திணைக்களத்துக்கு மேற்குறித்த விடயத்தை அறிவித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தம் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்கள்.

அதன் போதே அவர்கள் இருவருமாக இந்திய அரசின் நிலைப்பாட்டுக்கு இணங்க உடனடிப் போர் நிறுத்தமொன்றுக்கு இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளனர். அதன் பின் அவர்கள் அமெரிக்கத் தூதரைச் சந்தித்து அது குறித்து விளக்கியுள்ளனர்.

மிக விரைவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை அடுத்து வரும் இரண்டொரு நாட்களுக்குள் வெளியிடுவார் என்று அவர்கள் உறுதியான எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஆயினும் ஜனாதிபதி அதனை மேற்கொள்ளாது தொடர்ந்தும் விடுதலைப் புலிகளின் தலைமையை குறுகிய நிலப்பரப்புக்குள் சிக்க வைத்து யுத்தத்தை முன்கொண்டு செல்வதிலேயே ஆர்வம் காட்டியதாகவும் அந்தத் தகவல் குறிப்பு மேலும் தெரிவிக்கின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.