Friday, March 25, 2011

பிரபாகரனையும் பொட்டு அம்மானையும் காப்பாற்ற அமெரிக்கா முயன்றிருந்தது: சம்பிக்க ரணவக்க.

லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களை மேற்கத்தேய நாடுகள் ஆதரித்துள்ளன. இதன் காரணமாக அந்நாடு பிளவுபடும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. லிபியாவில் உள்ளது போன்ற ஒரு நிலைமையை இலங்கையிலும் ஏற்படுத்தவே 2009 மே மாதம் ஐ.நா. முயன்றது என ஜாதிக ஹெல உறுமய குற்றம்சுமத்தியுள்ளது.

லிபியாவில் மாத்திரமல்ல, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூடத் தமது நாட்டு மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியுள்ளன. எனினும் அந்த நாடுகள் மீது குண்டுகளை வீச எந்த நாடும் முன்வரவில்லை என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் மின்சக்தி அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவிததுள்ளார்.

இலங்கையிலும் கடைசிநேர யுத்தத்தின்போது இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள மேற்கத்தேய நாடுகள் முயற்சி செய்தபோதிலும், மக்கள் அரசுக்கு வழங்கிய ஆதரவால் எமது பிரச்சினையில் வெளிநாடுகள் தலையிட முடியாமல் போயிற்று என்றும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

லிபியாவின் பென்காசி நகரை முதன்மைப்படுத்தி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களால் மேற்கத்தேய நாடுகள் லிபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. லிபியா இரண்டு நாடுகளாகப் பிரிந்துபோகும் நிலைமையே அங்கு தோன்றியுள்ளது. பென்காசி நகரை முதன்னமைப்படுத்தி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட போராட்டங்களை பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக்கொண்டதனால் லிபியாவில் இரண்டு ஆட்சிகள் ஏற்படுவதற்கு வித்திட்டுள்ளன.

லிபியாவின் கடாபி, சிரியாவின் அசாத் ஆகியோருக்கு எதிராகவே மேற்கத்தேய நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. இவை தவறான முன்னுதாரணங்களாகும். இதனைத்தான் ஐக்கிய நாடுகள் சபை 2009 மே மாதம் இலங்கையில் நடத்த முயற்சித்தது.

வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் முள்ளிவாய்க்காலில் அகப்பட்டதும் ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் ரொபர்ட் ஒ பிளேக் இந்த யோசனையையே வலியுறுத்தினார். பொதுமக்களைக் காப்பாற்றுவதற்காக தலையிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பீரங்கித் தாக்குதல்களில் பொதுமக்கள் பலியானதைக் காட்டும் புகைப்படங்களை அமெரிக்கா தனது செய்மதி ஊடாகப் பெற்ற புகைப்படங்கள் என வெளியிட்டது. எமது நாட்டுக்கு எதிராக நடவடிக்கையை மேற்கொள்ளவே அவர்கள் முயற்சித்தனர்.

பசுபிக் வலயத்திலுள்ள அமெரிக்காவின் யுத்தக் கப்பல்களைக் கொண்டுவந்து இலங்கையிலும் இதனையே செய்ய முயற்சித்தனர். எனினும், எமது அரசு சிறப்பாக செயற்பட்டது. யுத்தம் நடைபெற்றபோது மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி எமது நாட்டு மக்களின் ஒத்துழைப்பு அரசுக்கு இருப்பதை நாம் காட்டினோம். மக்கள் அரசுக்கு வாக்களித்ததன் காரணமாகவே அந்த வெளிநாட்டு சக்திகள் இலங்கைக்கு வரவில்லை.

இதற்காக நாம் மக்களுக்கு நன்றி செலுத்துகின்றோம். அதனால்தான் மேற்கத்தேய நாடுகள் இலங்கை மீது மேற்கொள்ளவிருந்த விமானத் தாக்குதல்கள் தடைப்பட்டன. அப்படியில்லாவிட்டால் பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் காப்பாற்றப்பட்டிருப்பார்கள்.

மேற்கத்தேய நாடுகள் தமக்கு எதிரான போக்குகளைக் கொண்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்துகின்றன. லிபியா மீது இன்று தாக்குதல் மேற்கொள்பவர்கள், வேறு நாடுகள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளக்கூடும். இந்தக் கதி நாளை இலங்கைக்கும் ஏற்படக்கூடும். மேற்கத்தேய நாடுகளின் தலையீட்டை நாம் அனைவரும் வன்மையாகக் கண்டித்து அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.