Tuesday, February 22, 2011

பார்வதி அம்மாளின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமமாகியது

தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் ஈழத்தாய் பார்வதி அம்மாளின் பூதவுடல் இன்று மாலை 4.50 மணியளவில் அக்கினியுடன் சங்கமித்தது. அமரர் வேலுப்பிள்ளையின் ஒன்று விட்ட சகோதரர் சங்கரநாரயணன் சிதைக்குத் தீ மூட்டினார்.

ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்ட அன்னாரது பூதவுடல் தேசியத் தலைவரின் வல்வெட்டித்துறை வீட்டுக்கு முன்னால் பத்து நிமிடங்கள் வைக்கப்பட்டிருந்ததாகத் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

குவித்து வைக்கப்பட்டிருந்த இராணுவத்தினரையும் பொருட்படுத்தாது மக்கள் அன்னாரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல்வாதிகளான பழ. நெடுமாறன், வைகோ, சீமான் மற்றும் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோரின் இரங்கல் உரைகள் தொலைபேசி ஊடாக ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்பட்டன.

சுரேஷ் பிரேமச்சந்திரன், விநோ நோகதரலிங்கம், சிவசக்தி ஆனந்தன், பா. அரியநேத்திரன்,யோகேஸ்வரன்,ஸ்ரீதரன், சரவணபவன், கஜேந்திரகுமார், சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா உட்படப் பெரும் எண்ணிக்கையிலான உள்ளுர் தமிழ் அரசியல் பிரமுகர்கள் அன்னாரது இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டதுடன் இரங்கல் உரைகளையும் நிகழ்த்தினர்.

இதேவேளை, இந்த இறுதி நிகழ்வைப் புகைப்படம் பிடித்துக் கொண்டிருந்த புகைப்படப்பிடிப்பாளர்கள் உட்பட பலரையும் இராணுவத்தினர் விசாரணைக்கு உட்படுத்தியதுடன் அவர்களைப் புகைப்படம் பிடித்ததுடன் அவர்களது அடையாள அட்டைகளையும் புகைப்படம் பிடித்தனர் என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.






0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.