Thursday, February 10, 2011

முள்ளிவாய்க்காலில் காவியமான மகத்தான மாவீரன் கேணல் வீரத்தேவன்

வீரத்தேவனின் துணிகரமான சாதனைகளை என்னால் எழுத்தில் வர்னிக்க முடியாதவை இருந்தாலும் எனது மனதைத்தொட்ட ஒரு நிகழ்வை மட்டும் அவனது மன உறுதியை எழுத உந்தியது.1996ஆம் ஆண்டு 9ஆம் மாதம் ஆரம்பத்தில் மட்டு அம்பாறை மாவட்ட புலனாய்வுத்துறைக்கு பொறுப்பாளராக இருந்த நிக்சன் அவர்கள் வவுனியா மாவட்ட புலனாய்வுப்பொறுப்பை ஏற்றிருந்த காலம்.

நிக்சன் அவர்களின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவற்காக வவுனியாவுக்கான புலனாய்வு வேலைகளை எற்கனவே செய்த அனுபவம் இருந்ததால் பொட்டு அம்மான் நியுட்டன் அவர்களின் நிர்வாகத்தில் இருந்தது நிக்சன் அவர்களின் நிர்வாகத்துக்கு என்னை மாற்றியிருந்தார். 09-09-1996 ஆம் ஆண்டு பண்டிவிரிச்சானில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் மிக இரகசியமாக நிக்சன் அவர்களின் வவுனியாவுக்கான நடவடிக்கை முகாம் அமைத்திருந்தது. நானும் நிக்சன் அவர்களும் முதல் முறையாக சந்தித்து பேசினோம். வவுனியாவுக்குள் செய்யவேண்டிய வேலை சம்மந்தமாகவும் தாக்குதல் நடத்தவேண்டிய ஒரு இலக்கு சம்மந்தமாகவும் விரிவாகக் எனக்கு கூறினார். என்னை பாதுகாப்பாக வவுனியாவுக்குள் அழைத்து செல்வதற்காக அணி ஒன்றை அறிமுகம் செய்தார். அதில் பேரின்பம் நிலவழகன் வீரத்தேவன் அறிவாளி ஆகியோர் இருந்தனர்.

வீரத்தேவனும் அறிவாளியும் தோற்றத்திலும் வயதிலும் சிறியவர்களாக இருந்ததால் இருவரையும் நான் மனதில் போட்டுக்கொள்ளவில்லை. விடுதலைப்புலிகளின் கேணல் ஒருவன் அந்த அணியில் ஒளிந்திருக்கிறான் என்று நான் எள்ளளவும் நினைத்திருக்கவில்லை.

மறுநாள் நகர்வுக்கு தயார் செய்யப்பட்டது. எனக்கு பண்டிவிரிச்சான் பகுதி புதிதாக இருந்ததால் நிக்சன் அவர்கள் வீரத்தேவனை அழைத்து என்னை வெளியில் இடம் காட்டும்படி அனுப்பினார் இருவரும் சைக்கிளில் வெளியில் மடுமாதா தேவாலயம்வரை சென்றோம் அப்பகுதியில் இருந்த இடம் பெயர்ந்தோர் முகாமில் உள்ள வீரத்தேவன் தனது உறவினர் வீட்டுக்கு என்னை அழைத்துச்சென்றான். அப்போதுதான் எதிர்பாராத அந்த செய்தி கிடைத்தது.

வெளி மாவட்டம் ஒன்றில் இருந்த வீரத்தேவனின் தாயார் இறந்த செய்தியை உறவினர்கள் வீரத்தேவனிடம் சொன்னார்கள் வீரத்தேவனின் கண்களில் இருந்தது கண்ணீர்த்துளிகள் வழிந்தோடத்தொடங்கியது. பின் சிறிது நேரம் வீரத்தேவனின் உறவினர்களுடன் கதைத்துவிட்டு இருவரும் முகாமிற்கு சென்றோம். வழியில் வீரத்தேவன் என்னிடம் சொன்னான் அண்ணே இதை நிக்சன் அண்ணாவிடம் சொல்லவேண்டாம் சொன்னால் இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு செல்வதற்கு அனுமதிக்கமாட்டார் அம்மா எமது கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருந்தாலாவது போய்ப்பார்கலாம் சித்தி ஒருவர் தான் அளம்பிலில் இருக்கிறார் உள்ளேபோய் திரும்பி வந்தால் அங்கு செல்கிறேன்.

திரும்பிவராவிட்டால் அம்மாவிடம் செல்கிறேன் என்றான் அவன் இப்படிச்சொன்னதும் எனக்கு அவனை நினைத்து கவலைப்படுவதா?… தாயை விட தாய்நாடுதான் முக்கியம் என்பதை சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் அந்த வார்த்தைகளின் உயிருள்ள உருவத்தை அவனில் நான் கண்டேன். எமது முகாம் நெருங்க நெருங்க தனது முகத்தையும், கண்களையும் சரி செய்தான். நிக்சன் அவர்களிடம் சொல்லவேண்டாம் என்ற விடயத்தை என்னால் மறைக்க முடியவில்லை காரணம் தாய்ப்பாசம் என்பது மன உணர்வுகளுக்குள் அல்லாது மேன்மையாகவே நான் கருதுபவன். இதனால் நிக்சனிடம் தெரியப்படுத்தினேன். நிக்சன் அவர்கள் வீரத்தேவனை அழைத்து கதைத்து நகர்வு அணிக்கு வீரத்தேவனுக்கு பதிலாக வேறொருவரை எம்முடன் இணைக்கத்தயாரானார். அதற்கு வீரத்தேவன் தான் நகர்வில் பங்குபெறுவதில் உறுதியாக இருந்தான்.

அவன் விரும்பியதின் பேரில் எம்முடன் இணைக்கப்பட்டான். நிக்சன் அவர்களும் அனுமதிகொடுத்து தானும் இராணுவக் கம்பிவேலிவரை வருவதற்கு தயாரனார் காட்டை ஊடறுத்தபடி இராணுவக் காவலரண் நோக்கி அணி வேகமாக நகர்கிறது. அடர்ந்த காட்டுக்குள் செல்வதே கஸ்ரம் அதிலும் இருட்டில் செல்வதென்பது அதைவிட கஸ்ரம். அனுபவப்பட்டவர்களுக்கே அதன் கஸ்ரம் தெரியும் சில இடங்களில் ஒருவரை ஒருவர் தொட்டபடியே நகர்ந்தோம்.

நாம் இராணுவ காவலரண்களை நெருங்கும் போது அதிகாலை 01 மணியாகிவிட்டது. காவலரண்களில் இருந்து சில மீற்றர் தூரத்தில் இருந்து இராணுவத்தினரின் நடவடிக்கைகளை அவதானித்தோம். அங்கு சக்தி வாய்ந்த மின்குமிழ் வெளிச்சமும் பற்றைகளோ மரங்களோ எதுவுமில்லாமலும் அதன் பின்னால் உயரமான தொடர் அரணும் அதில் 50 மீற்றர் இடைவெளியில் உள்ள காவலரண்களில் இராணுவத்தினரும் இருந்தனர். அவர்கள் கதைக்கும் சத்தம் எமக்கு கேட்டது. இராணுவத்தினர் விழிப்பாக இருந்ததால் காவலரணை கடந்து செல்வது கடினமாக இருந்தது.

எனவே அப்படியே எம்மை நிலைப்படுத்திவிட்டு பேரின்பமும் வீரத்தேவனும் பக்கவாட்டாக சத்தமின்றி சென்றார்கள். சில மணிநேரம் கழித்து எம்மிடம் வந்து சில மீற்றர் துரத்திலிருக்கும் காவலரண் வழியாக செல்லலாம் என எம்மை அழைத்தனர். நாங்களும் சத்தமின்றி அவர்களின் பின் சென்று. நாம் காவலரணை நெருங்கினோம். அங்கு மிகவும் இடரான சூழலை எதிர்கொண்டோம். அதாவது இராணுவத்தின் நாய்கள் நாம் இருந்த திசையைப் பார்த்து குரைக்க ஆரம்பித்தது;. இராணுவத்தினர் நாய்களைக் கூப்பிடவும் அது போகவில்லை. ஒரு இராணுவவீரன் காவலரணிலிருந்து வெளியே வந்தான்.

அவனுடைய ஒரு கையில் மின்சூழும் மறு கையில் T56-2 துப்பாக்கியும் இருந்தது. அவன் நாம் இருந்த பகுதி பற்றையாகவும் இருட்டாகவும் காணப்பட்டதால் வெளிச்சத்தினை எம்மை நோக்கி பாய்ச்சினான். நாம் எல்லோரும் இராணுவ சீருடையும் தலைக்கு பச்சை வர்ணம் பூசப்பட்ட சாக்குத்தொப்பியும் அணிந்திருந்ததனால் அவனுக்கு எம்மை தெரியவில்லை என்று நினைக்கிறேன். எம்மை நோக்கி மின்சூழினை அடிக்கும் போது கண்களை மூடுங்கள் என்று மெதுவாக ஓர் உருவம் சொல்லியது. கடும் இருளாக இருந்ததால் அது யாரென்று அப்போது எனக்கு தெரியவில்லை. அந்த இராணுவவீரன் நாயையும் அழைத்துக்கொண்டு தனது இருப்பிடத்திற்கு சென்றான். நாமும் எமது பழைய நிலைக்கு வந்தோம்.

அங்கு அப்போது எந்த சத்தமும் இருக்கவில்லை. காவலரணுக்குள் இருந்த இரானுவத்தினர் நித்திரையோ என்னவோ தெரியவில்லை. சிறிது நேரம் நிதானமாக அவதானித்துவிட்டு வீரத்தேவனும் பேரின்பமும் கம்பி வேலியின் கீழாக உள்ளே நுழைந்தனர். நிலத்தோடு ஊர்ந்தபடி இரு இராணுவ நிலைக்குமிடையே செல்கிறார்கள் அரணின் பிற்பகுதிக்கு சென்று சாதகமான சூழலை உறுதிப்படுத்திவிட்டு வீரத்தேவன் மட்டும் கம்பி வேலியின் அருகே படுத்திருந்த எம்மை நோக்கி வந்து விரைவாக வரும்படி சொல்கிறான்.

எல்லோரும் மிக வேகமாக ஊர்ந்தபடி செல்கிறோம். அரணைக் கடந்ததும் இறுசல் வேலியும் அதன் பின் சில மீற்றர் காடும் அதனைத் தொடர்ந்து சமவெளியும் பின் பிரதான சாலையும் இவ்வளவு தூரத்தையும் கடந்து வரும் காட்டுக்குள் சென்ற பின்தான் ஓரளவு நிம்மதி நாம் கடந்துவந்த பகுதிக்குள் எது வேண்டுமானாலும் எமக்கு நடந்திருக்கலாம். நிச்சன் அவர்களுக்கு நாம் பாதுகாப்பாக காவலரனை கடந்ததனை நடைபேசி ஊடாக செய்தி தெரிவித்து முகாமிற்திரும்பி செல்லும்படி கூறிவிட்டு தொடர்ந்து நடக்கதொடங்கினோம்.முதல்நாள் மாலை 05 மணியிலிருந்து நடந்ததால் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு திசையறிகருவியின் உதவியுடன் மீண்டும் நடக்க ஆரம்பித்தோம். விடிவதற்குள் சில இடங்களை கடந்து செல்லவேண்டிய நிர்ப்பந்தம் எமக்கிருந்ததால் தொடர்ந்து நடந்தோம். சில இடங்களை பகலிலும் சில இடங்களை இரவிலும் நடக்க வேண்டியிருந்ததால் இருளும் வரை நீண்ட நேரம் காத்திருக்கவேண்டியும் இருந்தது.

எமது உணவு பிஸ்கட், சாக்லெட், முட்டை மா போன்ற உலர் உணவுதான். எமது துன்பத்திற்கு மேலும் மெருகூட்ட மழையும் பெய்தது. நான் வேறு நிருவாகத்திலிருந்து வந்ததால் என்னிடம் மழைக்கவசம் இருக்கவில்லை. அறிவாளி நீளமான பொலீத்தினை எடுத்து எல்லோருக்கும் கொடுத்தான். அதன் ஒருபகுதியை முடிந்துவிட்டு மறு பகுதியால் உள்ளே இறங்கி ஒரு கையால் பிடித்துக்கொண்டு படுத்திருந்தோம். வீரத்தேவனிமும் மற்றும் ஒரு சிலரிடம் மட்டுமே மழைக்கவசம் இருந்தது. நான் அவஸ்தைப்படுவதைப் பார்த்த வீரத்தேவன் தனது மழைக்கவசத்தை என்னிடம் தந்தான். நான் வாங்கவிலலை அவன் வற்புறுத்தி தந்து விட்டு சொன்னான் அண்ணா நீங்கள் நனைந்தாலும் வைத்திருக்கும் ஆவணம் நனையக் கூடாது அதற்காகயாவது போடுங்கள் என்றான் எனக்கு உண்மையிலே சங்கடமாகவே இருந்தது அவனுடைய செயல்.

நீண்டதுன்பத்தின் பின்னர் நான்காம் நாள் இரவு நானும் பேரின்பமும் சாதாரண உடைகளை அணிந்து கொண்டு காட்டிலிருந்து வீதிக்கு வந்தோம். பேரின்பம் தன்னுடைய முகவரொருவரின் வீட்டிலிருந்து துவிச்சக்கர வண்டி ஒன்றை கொண்டுவந்தார். இருவரும் வவுனியா நகர்ப்பகுதியிலிருந்த என்னுடைய முகவரின் வீட்டிற்கு சென்றோம். அங்கு தங்கியிருந்து கொண்டு நிக்சன் அண்ணன் அவர்களால் குறிப்பிட்ட இலக்கு. எனக்கும் எனது முகவரிற்கும் தெளிவாக தெரிந்திருந்ததால் எனது முகவரினூடாக தகவலை சேகரிப்பதில் ஈடுபட்டேன்.

இரண்டு நாட்களிற்கு பின் வீரத்தேவன் மற்றும் போராளிகளுக்கு உணவுகள் எடுத்துக்கொண்டு இருவரும் காட்டுக்குள் சென்றோம். அங்கு சென்று நிக்சன் அண்ணாவுடன் நடைபேசியூடாக தொடர்பு கொண்டு இலக்கு தொடர்பான பிரச்சனைகளை தெரிவித்தேன். அதற்கு பதிலாக வேறு ஒரு தாக்குதல் திட்டத்தையும் சொன்னேன். அதற்கு அவர் மீண்டும் முயற்சிக்கும் படியும் கூறினார்.மீண்டும் இருவரும் எனது முகவரின் வீட்டிற்கு வந்தோம். எனக்கு வவுனியாப்பகுதி நன்கு பரிட்சயமானதால் எனக்கு தெரிந்த வேறு இருவரை சந்தித்து இலக்கு பற்றிய தகவல்களை திரட்டியதனால் இலக்கு வவுனியாவில் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. அடுத்த தாக்குதல் திட்டத்தைப்பற்றி பேரின்பத்திற்கு கூறினேன்.

மீண்டும் இரண்டு நாட்களிற்கு பின் எமது அணிக்கு தேவையான உணவுகளையும் பொருட்களையும் எடுத்துக்கொண்டு இருவரும் காட்டுக்குள் சென்றோம். தாக்குதலுக்காக இன்னுமொருவரை அழைத்து வர வேண்டியதாக இருந்தது. இதனால் உடனே திரும்பாமல் துவிச்சக்கர வண்டியையும் காட்டுக்குள் மறைத்து வைத்துவிட்டு அணியுடன் தங்கினோம். விடிந்ததும் தாக்குதல் திட்டத்தையும் இடத்தையும் கூறினேன். உடனே எல்லோரும் போட்டி போட்டுக்கொண்டு தாக்குதல் நடத்தமுன்வந்தாகள் வந்தார்கள். ஆனால் தாக்குதலுக்கு போரின்பன் உட்பட ஒருவர்மடடுமே தேவைப்பட்டது யாரைத்தெரிவு செய்வது என்பதே பெரிய சிக்கலாகிவிட்டது. பின் நிலவழகனை கூட்டிச்செல்வது என்று தீர்மாணிக்கப்பட்டது.

வீரத்தேவனுக்கோ மிகுந்த கவலை.இருட்டிய பின் தான் காட்டிலிருந்து வெளியேற வேண்டும். அத்துடன் ஆயுதங்களும் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. மூவரும் ஒரு துவிச்சக்கர வண்டியில் சென்று மறு நாள் இரவு வெற்றிகரமாக தாக்குதலை முடித்துவிட்டு ஓட்டமும் நடையுமாக காட்டுக்குள் போய்ச் சேர்ந்தோம்.வீரத்தேவனுக்கு தான் தாக்குதலில் பங்குபற்றவில்லை என்பது மிகவும் கவலை. தன் தாய் இறந்த செய்தி கேட்டபோது எப்படி இருந்தானோ அப்படியே இப்போதும் இருந்தான். அறிவாளியும் வீரத்தேவனைப் போலவே கவலைப்பட்டான். பேரின்பன் இருவரையும் சமாதானப்படுத்தியும் அவர்கள் முகம் பழைய நிலைக்கு வரவில்லை. பின்னர் அதிகாலையில் எமது கட்டுப்பாடடு பகுதி நோக்கி நகரத் தயாரானோம். அப்போது வீரத்தேவன் நான் அணிந்திருந்த சேட்டை உற்றுப்பார்த்தான். நான் இராணுவ சீருடை அணியும் போது நான் அணிந்திருந்த சேட்டினைக் கழற்றி வீரத்தேவனிடம் கொடுத்தேன்.

அதற்கு வீரத்தேவன் நீங்கள் சேட்டைத் தந்து என்னை சமாளிக்கிறீர்கள் எனக்கு வேண்டாம் எனக் கூறினான்.பின் எல்லோரும் வந்த பாதையினு}டாக திசையறி கருவியின் உதவியுடன் இரண்டு நாட்களாய் நடந்து வரும்போது பயனபடுத்திய இராணுவ காவலரனின்; பின்பக்கம் வந்து கண்காணித்தோம். நாம் கடந்துவந்தபாதையில் மேலதிக முற்கம்பிகள் போடப்பட்டிருந்தது. திரும்பி சென்று வேறு பாதை தேடினோம். எல்லாப்பக்கமும் விழிப்பாக இருந்ததால் எமது பகுதிக்கு செல்ல முடியவல்லை. மறு நாள் வேறு பாதை பார்த்து நடந்தோம். இருளும் சூழத்தொடங்கியது. திடிரென சிங்களத்தில் கதைப்பது மிக அருகில் கேட்டது.

உடனே வீரத்தேவன் எல்லோலையும் பின்நோக்கி நகர சொல்லிவிட்டு எமக்கு காப்புக்கொடுத்துக் கொண்டு நின்றான். நாம் அந்த இடத்தை விட்டு நகர்ந்த பின் தான் வீரத்தேவன் இறுதியாக வந்தான். மறுநாள் மீண்டும் பழைய பாதைக்கே வந்தோம். கடந்துசெல்ல கூடியதான நிலமை இருந்ததால் வீரத்தேவனும், அறிவாளியும் இராணுவ நடமாட்டத்தை பார்த்து எமக்கு காப்புக் கொடுக்க நாம் மெதுவாக எமது பகுதிக்குள் நகர்ந்தோம். மறு நாள் காலையில் முகாமை அடைந்தோம். நிக்சன் அண்ணன் தாக்குதல் சம்பந்தமாக எல்லோருடனும் கதைத்த பின்னர் நான் புதுக்குடியிருப்பிலுள்ள முகாம் ஒன்றுக்கு போகும் போது வீரத்தேவனும் தனது தாயாரின் சோக செய்தியை விசாரிப்பதற்கு அலம்பிலிற்கு செல்வதற்கு தயாரனான் எரிபொருள் பிரச்சனை இருந்ததால் பேருந்திலேயே செல்லவேண்டியிருந்தது இருவரும் ஒன்றாகவே போகிறோம்.

ஏதோ ஒரு காரணத்துக்காக புதுக்குடியிருப்புடன் பேரூந்து நிற்கிறது. நான் புதுக்குடியிருப்பு கோம்பாவிலில் உள்ளமுகாம் அருகில் உள்ளதால் நான் நடந்து செல்வேன் ஆனால் வீரத்தேவன் வாகனம் ஏதும் வந்தால்தான் அளம்பில் போகலாம் இந்தநிலையில் அளம்பில் நோக்கிச்செல்லும் வாகனங்கள் எதும் வரும்வரை நடந்தேபோகிறேன் என்று கூறி முல்லைத்தீவு வீதியை நோக்கி அந்த கேணல் நடந்தே போகிறான். பிற்பகுதியில் வீரத்தேவன் செய்த தாக்குதல்கள் எத்தனையோ தென்னிலங்கையில் வீரத்தேவனால் ஒழுங்கு செய்த சம்பவங்கள் பாதுகாப்புக் காரணத்துக்காக இங்கு குறிப்பிடவில்லை.

” ஒரு வீரனின் உடலை அழிக்கலாம் அவனின் புகழை அழிக்க முடியாது”பின்னர் நான் எத்தனையோ நகர்வுகளை எதிரியின் பிரதேசத்தில் செய்திருந்தாலும் எனது முதல் நகர்வில் என்னுடன் பங்குபற்றிய என் இனிய தோழர்கள் எவரும் தற்போது உயிருடன் இல்லை.

என் இனியவர்களே நீங்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து செய்கிறேன். உங்களோடு வரும் வரை தொடர்ந்து செய்வேன்;

என்றும் உங்கள் நினைவுடன். வன்னியில் இருந்து சக போராளி சுதர்சன்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.