Sunday, May 13, 2007

நான்கு போரை விட மோசமானது புலிகளின் நான்கு வான் தாக்குதல்கள்: இக்பால் அத்தாஸ்

[ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2007]


தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட நான்கு வான் தாக்குதல்களானவை நான்கு ஈழப் போர்களை விட அதிகளவான அச்சத்தையும், அதிர்ச்சியையும் சிறிலங்காவின் பாதுகாப்பு, பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக எழுப்பியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் வார இதழின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஏப்ரல் 29 ஆம் நாளுக்குப் பின்னர் வான்பரப்பு அமைதியாக உள்ளது. எனினும் சடுதியான வான் தாக்குதல் நிகழலாம் எனப் பல நாடுகளின் புலனாய்வு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. சிறிலங்கா அரசு முழுமையான வான் பாதுகாப்பு பொறிமுறைகளை பெறுவதற்கு முன்னர் விடுதலைப் புலிகள் மேலதிக தாக்குதல்களை நிகழ்த்தலாம்.

சிறிலங்காவில் உள்ள இரு பரிமாண ராடார்களை உரிய முறையில் இயங்க வைப்பதற்கும், அவற்றை புனரமைக்கும் நோக்குடனும் இந்தியாவின் வான்படை அதிகாரிகள் இங்கு வந்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் உல்லாசப் பயணத்துறையை பெருமளவில் பாதித்துள்ளது. தவறான ஆலோசனைகள் மூலம் அனைத்துலக வானூர்தி நிலையம் இரவு 10.30 மணியில் இருந்து காலை 4.00 மணிவரை மூடப்படுவது அதனை மேலும் பாதித்துள்ளது.

சிறிலங்காவிற்கு பெரும் வெளிநாட்டு நிதியைப் பெற்றுத்தரும் தேயிலை வர்த்தகத்தில் இது பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தமது மாதிரி தேயிலை வகைகளை விரைவு வானூர்தி சேவைகள் மூலம் அனுப்புவதில் தடங்கல்களை எதிர்கொண்டு உள்ளனர். இதே நிலைமைகள் தான் பூக்கள், பழங்கள் ஏற்றுமதித்துறையினரும் சந்தித்துள்ளனர். இரவு வானூர்தி சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதனால் சரக்கு வானூர்திகளைப் பெறுவதில் பெரும் இடைஞ்சல்கள் தோன்றியுள்ளன.

வானூர்தி நிலையத்தை மூடியது தனது வான்பரப்பை பாதுகாக்க முடியாது என்ற நிலையை அரசு வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளதாகவே கொள்ள முடியும். அனைத்துலக வானூர்தி நிலையத்தின் வான்பரப்பைக்கூட பாதுகாக்க முடியாத நிலைமை அரசுக்கு தோன்றியுள்ளது.

ஐரோப்பா மற்றும் தூர கிழக்கு நாடுகளில் உள்ள மக்களும் தமது பயணங்களின் போதான இடைத்தங்கல் வானூர்தி நிலையமாக கொழும்பை தற்போது பயன்படுத்துவதில்லை. இதன் விளைவாக வானூர்தி நிலையத்தை சுற்றி உள்ள விடுதிகளுக்கும், வாடகைக் கார் உரிமையாளர்களுக்கும் கூட வியாபாரம் இல்லை.

எனினும் சில விருந்தினர்கள் சிறிலங்காவுக்கு வந்து செல்கின்றனர். அவர்கள் பல்வேறு வகையான ராடார்களை விற்பனை செய்பவர்கள். சிலர் பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர்.

எனினும் இதற்காக அரசு பாதுகாப்பு அமைச்சின் கீழ் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்திற்கு கோத்தபாயா தலைமை வகிக்கிறார். அவரே படையினருக்கான ஆயுதக் கொள்வனவுக்கான தனியான பொறுப்பாளராவார். இந்த நிறுவனத்தின் ஊடாகவே படையினருக்கான கொள்முதல்கள் மேற்கொள்ளப்படலாம் என அனைத்துலகத்தில் உள்ள சிறிலங்கா இராஜதந்திரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே வாடகைக்கு மிக்-29 ரக வானூர்திகளை கொள்வனவு செய்ய சிறிலங்கா அரசு முயன்று வருவதாக புலிகளுக்கு ஆதரவான புதினம் இணையத்தளம் முதலில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

முதலில் வான்படை அதிகாரிகள் மிக்-29 வானூர்திகளை கொள்வனவு செய்வதற்கான பரிசோதனைகளை நடத்துவதற்காக மொசக்கோ சென்றிருந்தனர். எனினும் இது காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரியவில்லை.

எனினும் இரு மிக்-29 ரக வானூர்திகளை வாடகைக்கு பெறும் பொருட்டு இந்த வாரம் சிறிலங்கா வான்படையின் வான் பொறியியல்துறை தலைவர் வைஸ் மார்சல் பிரிசந்தா சில்வா உக்ரேனுக்கு சென்றுள்ளார்.

சிறிலங்கா வான்படையினர் இந்த வானூர்திகளை செலுத்துவதற்கான பயிற்சிகளை கொண்டிருக்கவில்லை. எனவே இந்த வானூர்திகளுடன் வானோடிகளையும் குத்தகை அடிப்படையில் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உக்ரேனுக்கு புனரமைப்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்டு பின்னர் சிறிலங்கா வான்படையிடம் கையளிக்கப்பட்ட 4 மிக்-27 ரக வானூர்திகளில் இரு வானூர்திகள் சேவையில் ஈடுபடுத்த முடியாது என கைவிடப்பட்டுள்ளது. இவற்றிற்கான உதிரிப்பாகங்கள் உக்ரேனில் இருந்து கொண்டுவரப்பட உள்ளன.

மிக்-29 வானூர்திகளின் மூலம் இலகுரக வானூர்திகளை தாக்குவது இலையானை பெரும் சுத்தியல் கொண்டு தாக்குவது போன்றது என சில வான்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிக்-29 வானூர்திகள் அதனை ஒத்த வானூர்திகளை தாக்குவதற்கு என வடிவமைக்கப்பட்டது. உலகில் எந்த பகுதியிலும் சிறிய இலகு ரக வானூர்திகளை தாக்கியளிக்க மிக்-29 ரக வானூர்திகள் பயன்படுத்தப்பட்வில்லை.

புத்தம் புதிய மெசடீஸ் பென்ஸ் காரைக் கொண்டு மாட்டு வண்டிகளை மோதுவது போன்றது இது என வான்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மிக்-29 இன் அதிஉயர் வேகம் Zlin-143 யைவிட ஐந்து மடங்கு அதிகமானது.

மிக்-29 வானூர்திகளை தவிர ராடார் வழிகாட்டி, லேசர் வழிகாட்டி, வெப்ப உணர்திறனுள்ள ஏவுகணைகளையும் கொள்வனவு செய்ய வேண்டும். இந்த ஏவுகணைகளின் ஒன்றின் பெறுமதி 30,000 டொலர்களாகும். இது விடுதலைப் புலிகளின் மலிவான வானூர்திகளை தாக்குவதற்கான செலவான முறையாகும். எனவே நடந்துவரும் நாலாம் ஈழப்போர் செலவு மிக்கது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

வான் எதிர்ப்பு நடவடிக்கைகளை விட மேலும் சில செலவுகளும் குறிப்பிடத்தக்கது. 120 மி.மீ எறிகணை ஒன்றின் விலை 148 டொலர்கள், 81 மி.மீ எறிகணை ஒன்றின் விலை 74 டொலர்கள், 152 மி.மீ எறிகணை ஒன்றின் விலை 295 டொலர்கள். இவை தொடர்ச்சியான பயன்படுத்தும் வெடிபொருட்கள்.

கடற்படையால் பயன்படுத்தப்படும் 82 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தும் 14.5 மி.மீ ரவைகள் ஒவ்வொன்றும் 28,080 டொலர்கள் பெறுமதியானவை. அரசுக்கு தொடர்ந்து ஆயுதங்களை விநியோகம் செய்யும் தரகர் ஒருவருக்கு அரசு 200 மில்லியன் டொலர்கள் நிலுவையாக செலுத்த வேண்டி உள்ளது. எனவே அவர் இந்த முறை ஆயுதங்களை விநியோகம் செய்ய மறுத்து விட்டார். எனவே அரசு வேறு விநியோகிஸ்த்தரை நாடவேண்டியுள்ளது.

இதனிடையே விடுதலைப் புலிகள், மல்லாவியில் வான் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

போரின் செலவானது பொதுமக்களை பாதித்துள்ளது. உணவு, எரிபொருள், போக்குவரத்து என்பவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.