Tuesday, April 03, 2007

'மாமனிதர்' ஜெயக்குமாரின் இறுதி வணக்க நிகழ்வு: கிழக்குத் தீமோர் தூதரகம் இரங்கல்.!!

[செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2007]

தமிழீழ விடுதலைப் புலிகளின் அவுஸ்திரேலிய கிளைப் பொறுப்பாளர் 'மாமனிதர்' தில்லை ஜெயக்குமாரின் இறுதி வணக்க நிகழ்வு, இன்று மாலை மெல்பேல்பேண் ஸ்பிறிங்க்வேலில் உள்ள நகர மண்டபத்தில் நடைபெற்றது.

இன்று செவ்வாய்க்கிழமை மாலை 2.25 மணியளவில் அவருடைய புகழுடல் அடங்கிய பேழை ஊர்தியில் மண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டது.

வாயிலில் இருந்து மேடை வரை, செங்கம்பளம் விரிக்கப்பட்ட, மண்டபத்தின் பிரதான வாயிலில் 'மாமனிதர்' ஜெயக்குமாரின் தமிழ்ப் பாராம்பரிய உடையணிந்த உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது.

அவருடைய உருவப்படத்திற்கு முன்பாக மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டிருந்ததோடு, படத்தின் அருகாமையில் தமிழீழத்தின் தேசிய மலரான கார்த்திகைப் பூ வைக்கப்பட்டிருந்தது.


தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த மகளிர் தொண்டர்கள், செம்மஞ்சள் - சிவப்பு நிறத்தில் சேலை உடுத்தி, தீபச்சுடருடன் முன்செல்ல, அவர்களைத்தொடர்ந்து 'மாமனிதர்' தில்லை ஜெயக்குமாரின் புகழுடல் மண்டபத்துக்குள் அணிவகுத்து எடுத்து வரப்பட்டது.

இதன் பின்னர் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுத் தொண்டர்களினால் தமிழீழ தேசியக் கொடி அவரது புகழுடல் மீது போர்த்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இறுதி நிகழ்வுக்கு வந்திருந்த பொதுமக்களும் அவுஸ்திரேலிய அரசியல்வாதிகளும், கல்விமான்களும் தமது இறுதி வணக்கத்தை செலுத்திச் சென்றனர்.



தொடர்ந்து சிறப்பு பேச்சாளர்கள், இரங்கலுரைகளை நிகழ்த்தியதோடு, தாயகத்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் மணிவண்ணனின் இரங்கல் உரை திரையில் ஒளிபரப்பப்பட்டது.

அத்தோடு 'மாமனிதர்' தில்லை ஜெயக்குமாரின் கடந்த கால நினைவுகளை பிரதிபலிக்கும் முகமாக ஒளிப்படக்காட்சிகளும் சோக இசையுடன் ஒளிப்பரப்பப்பட்டிருந்தது.


உலகெங்கிலும் இருந்து பெறப்பட்ட, இரங்கல் செய்திகளை தாங்கிய நினைவு மலர் இன்றைய இறுதி வணக்க நிகழ்வில் வழங்கப்பட்டிருந்தது. இதில் சிட்னியில் உள்ள கிழக்குத் தீமோர் நாட்டுத் தூதரகம் அனுப்பியிருந்த அனுதாபச் செய்தியும் உள்ளடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ் இறுதி வணக்க நிகழ்வுகள் தாயகத்தில் புலிகளின் குரல் வானொலி ஊடாக நேரடி ஒலிபரப்புச் செய்யப்பட்டதுடன் அவுஸ்திரேலியாவிலும் ஒலி-ஒளிபரப்புச் செய்யப்பட்டிருந்தது.
இரவு 8 மணிக்கு இறுதி வணக்க நிகழ்வுகள் நிறைவுற்று, மாமனிதரின் புகழுடல் தனது இறுதிப்பயணத்தை ஆரம்பித்தது.

அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் இருந்தும், நியூசிலாந்தில் இருந்தும், மலேசியாவில் இருந்தும் வருகை தந்திருந்த பிரதிநிதிகளோடு 2000-க்கும் மேற்பட்ட மக்களும் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்.
நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.