[வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2007] அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவை நோக்கி படகில் வந்துகொண்டிருந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் 85 பேர் அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினர் இப்படகை பெப்ரவரி 19 ஆம் நாளில் இருந்து அவதானித்து வந்ததாகவும் இவர்கள் பயணம் செய்த படகு, கடற்பயணத்துக்கு உகந்தது அல்ல என்று அறிந்தவுடன், பெப்ரவரி 20 ஆம் நாள் அதிகாலை வேளையில் படகை வழிமறித்த கடற்படைப் படையினர், அவர்களை அப்படகில் இருந்து தமது கடற்படைக் கலத்துக்கு மாற்றியதாக அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஹெவின் அன்ட்ரூஸ் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அதேவேளை அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கின்றார்களா அல்லது அவர்கள் எங்கு கொண்டு செல்லப்படவுள்ளார் என்பது பற்றியோ குடிவரவுத் திணைக்களம் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.





