Tuesday, February 01, 2011

வவுனியாவில் மழை. வான்கதவுகள் திறப்பால் வெள்ளப் பெருக்கு: கிராமங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் இடப்பெயர்வு. நிலைமைகளை பார்வையிட்டார் சிவசக்திஆனந்தன்.

வவுனியாவில் நேற்று முதல் தொடர்ந்து பெய்துவரும் அடைமழையால் வவுனியா மாவட்டத்திலுள்ள குளங்கள் அனைத்தும் நீர்நிரம்பி வான்கதவுகள் திறந்துவிடப்பட்டு தண்ணீர் வழிந்தோடுவதால் பெரும்பாலான கிராமங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களின் வீடுகளினுள்ளும் தண்ணீர்புகுந்துள்ளது. இப்பகுதி மக்கள் மீண்டும் ஒரு இடப்பெயர்வைச் சந்தித்துள்ளனர். சிலகுளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் உள்ளதாக வவுனியாவில் இருந்து எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளான பூந்தோட்டம், திருநாவற்குளம், தாண்டிகுளம் போன்ற பகுதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் நேரில் சென்று பார்வையிட்டார். வவுனியா மாவட்டத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான வயல்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. மேட்டுநிலப் பயிர்களான உளுந்து, கௌபி, பயிறு போன்ற பயிர்கள் முற்றாக அழிந்துள்ளன. ஏற்கனவே நெற்பயிர்கள் நோயினாலும் வெள்ளத்தினாலும் அழிந்துள்ளன.

இதனைப்போன்றே வாழைப்பயிர்ச் செய்கையும் அழிந்து விவசாயிகளுக்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாவற்குளம் வானிலிருந்து ஒரு அடிதண்ணீர் நிரம்பிவழிவதால் நான்கு கதவுகளிலும் 20அங்குலம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் நெளுக்குளம் நேரியகுளம் பாதையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

இன்றுடன் மழை நின்றால் இன்னமும் மூன்றுதினங்களில் வெள்ளம் வடிந்துவிடும் என்று நீர்ப்பாசனப் பொறியியலாளர் தெரிவித்தார். திருநாவற்குளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் நீரால் சூழப்பட்டுள்ளது.

மழைநீர், கிணற்றுநீர், மலசலக்கூட நீர் ஆகியவை ஒன்றாகக் கலந்துள்ளதால் தொற்றுநொய் பரவும் அபாயம் உள்ளது. திருநாவற்குளத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 800 பொதுமக்கள் திருநாவற்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் தங்கியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இப்பகுதியைப் பார்வையிட்டபொழுது வவுனியா நகரசபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் குமாரசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

இன்றுகாலை முதல் மக்கள் கைக்குழந்தைகளுடன் உணவின்றி பெரும் துன்பப்படுகின்றனர். இவர்களுக்கு வவுனியா வர்த்தக சங்கத்தினரும் சேவாலங்கா தொண்டு நிறுவனத்தினரும் சமைத்த உணவு மற்றும் ஏனைய உதவிகளைச் செய்ய உள்ளனர்.

இதேபோல் பத்தினியார் மகிழங்குளம், பெரியார்குளம் மற்றும் தாண்டிக்குளம் பகுதிகளிலும் வீடுகளினுள் வெள்ளம் புகுந்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.