பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிள்ளைகளை முன்னணி பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கு அங்கீகாரம் கோரி, உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் இது தொடர்பாக ஆராயப்பட்டபோது, இவ்வாறு அனுமதி வழங்கினால் ஏனைய அரசாங்க நிறுவனங்களிலுள்ள உயரதிகாரிகளும் இத்தகைய சலுகையை கோருவர் என ஜனாதிபதி தெரிவித்தார்.
எனினும் 150 வெளிநாட்டு மாணவர்களுக்கு இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான புலமைப் பரிசில் வழங்கும் திட்டத்திற்கு அனுமதிகோரி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவை அங்கீகரித்தது.
இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், சீனா, ஜப்பான், அமெரிக்கா, கனடா, கென்யா, நியூஸிலாந்து மற்றும்சில ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இப்புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. பல்கலைக்கழக கட்டணங்களிலிருந்து இம்மாணவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதுடன் இலங்கையில் தங்கிருக்கும் காலத்தில் ஏற்படும் செலவுகளுக்காக மாதாந்த கொடுப்பனவொன்றும் அவர்களுக்கு வழங்கப்படும்.
இதேவேளை அங்கவீனமுற்ற படையினருக்காக உலக வங்கியின் உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள நலன்புரித் திட்டமொன்றுக்கு அனுமதிகோரி சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரமொன்றையும் ஜனாதிபதி நிராகரித்தார்.
சர்வதேச அமைப்புகளின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் இத்தகைய திட்டங்கள் குறித்து அமைச்சர்கள் இரு தடவை சிந்திக்க வேண்டும் என ஜனாதிபதி கூறினார்.
இராணுவம் மற்றும் அதன் திட்டங்கள் குறித்து தகவல்களை சேகரிப்பதற்கு இத்தகைய அமைப்புகள் முயற்சிப்பதற்கு சாத்தியமுள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.