Tuesday, December 28, 2010

காங்கிரசை எதிர்க்க தயாராகும் திமுக!

ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாரில் சிக்கி மத்திய தொலை தொடர்புதுறை அமைச்சர் பதவியை இழந்து வந்த ஆ.ராசாவை, கட்சியிலிருந்து ஓரம் கட்ட வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என்று திமுகவின் இரண்டாம் மட்ட தலைவர்கள் கருணாநிதியை வலியுறுத்துவதாக செய்தி வெளியானபோது, அதற்கு வாய்ப்பிருப்பதாகவே கருதப்பட்டது.

ஆனால் திமுகவை நிலைகுலைய வைக்கும் விதமாக சிபிஐ மூலம் காங்கிரஸ் அடுத்தடுத்து மேற்கொண்டு வருகிற அதிரடி நடவடிக்கைகளால், தற்போது ராசாவை விட்டுக்கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு திமுக தலைமை வந்துள்ளதாக அறிவாலய வட்டாரத் தகவல்கள் அடித்துக் கூறுகின்றன.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விஸ்வரூபம் எடுத்தபோது, ராசாவை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லுமாறு திமுகவை காங்கிரஸ் மேலிடம் கேட்டது.அதற்கு அப்போது கருணாநிதி நிறையவே தயங்கினார்.

” உச்ச நீதிமன்றத்தை சமாளிப்பதற்காகத்தான் இது தேவையாக உள்ளது.வேறு எந்த நெருக்கடியையும் கொடுக்க மாட்டோம்!” என்று சாமர்த்தியமாக பேசி ராசாவின் ராஜினாவை வாங்கியது காங்கிரஸ்.

சரி பிரச்சனை இத்தோடு நின்றுவிடும் என்று திமுக நினைத்ததற்கு மாறாக, அடுத்து வந்த நாட்களில் சிபிஐ-யை ஏவிவிட்டு ராசா மற்றும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளை சோதனை நடத்தியபோது விக்கித்துதான் போனது திமுக தலைமை!

ஆனால் அதைக்காட்டிலும் கூடுதல் அதிரடியாக, கிட்டத்தட்ட கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் மற்றும் கனிமொழியை நெருங்கும் விதமாக ‘தமிழ் மையம்’ நிறுவனர் ஜெகத் கஸ்பார் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் புகுந்து புறப்பட்டதையும், ராசாவுக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியதையும் பார்த்தபோதுதான், ஏதோ திட்டத்துடன்தான் காங்கிரஸ் உள்ளது என்பதை புரிந்துகொண்டார் கருணாநிதி!

அதற்கேற்ப கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஊழலுக்கு எதிராக அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி ஏகமாக கர்ஜித்தது (காமடிதான் என்றாலும்) திமுகவை மனதில் வைத்துதான் என்றும், மாநாட்டிற்கு வந்த தமிழக காங்கிரஸ் தலைவர்களை தனியாக அழைத்துப் பேசிய சோனியா தமிழகத்தில் கூட்டணி மாற்றம் இருக்கும் என்று சூசகமாக தெரிவித்ததாகவும் தகவல் வெளியாக, தங்களை கழற்றிவிட காங்கிரஸ் தயாராகிவிட்டதை திமுக இரண்டாம் மட்டத்தலைவர்களும் புரிந்துகொண்டுவிட்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.