Tuesday, March 30, 2010

தந்தை செல்வா- “அமைதி ஆனால் உறுதி” - நாளை அன்னாரின் பிறந்த நாள் : பூநகரான் - கனடா

தலைவர்கள் என்றாலே அவர்களிடம் ஒரு கம்பீரம் அல்லது உறுதி இருக்கும். ஆனால் வழமையாகத் தலைவர்களிற்கு இருக்கக் கூடிய எந்தத் தோற்றமும் இல்லாத ஆனால் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அரசியல் எதிரிகளினாலும் கண்ணியமானவர் என்று போற்றப்பட்டவரே தந்தை செல்வா அவர்களாவார்.

ஒரு தலைவருக்கு வேண்டிய உள்ள உறுதியானது , கொள்கை மற்றும் முடிவு போன்றவற்றில் அவரிடம் காணப்பட்ட போதும் , அவரது பேச்சு விரைவற்றதாக அமைதியானதாக ஆறுதலானதாக இருந்தது. ஒப்பீட்டளவில் அவரை “சயிலன்ஸ் பற் ஸ்ரோங் ”; என்று கூறலாம்.

தமிழகத்தில் அண்ணா தனது வெள்ளி நாக்கால் எழுப்பிய ஒலி அவரிற்கு தலைமையைத் தந்தது என்றால் தமிழீழத்தில் தந்தையின் மௌனம் அவரைத் தலைவராக்கியது எனலாம். எனக்குத் தெரிந்தவரை அதிகம் பேசாத அல்லது அதிகம் பேச விரும்பாத தமிழ்த் தலைவர்கள் இருவர். முதலாமவர் தந்தை சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் . இரண்டாமவர் தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரன்.

முதலாமவர் தமிழீழ ஆணையை மக்களிடம் 1975 இடைத் தேர்தலில் பெற்றுக் கொடுத்தார் என்றால் இரண்டாமவர் அதை அமைத்துக் காட்டியவர். அதை அங்கீகாரிக்க விடாமல் இந்தியா தடுத்து அழித்து விட்டது அவ்வளவு தான். அவ்வாறே ஈழம் சாத்தியமற்றது. சிறியது என்றெல்லாம் கேலி செய்யப்பட்ட காலத்தில் தமிழீழ மக்கள் ஆணையை பெறுவது என்பது இலகுவானதல்ல. ஆனால் தந்தை செல்வா அவர்களோ தமிழீழக் கோரிக்கையை முன் வைத்து, அரச ஆதரவுடன் தேர்தலில் ஈழத்திற்கு எதிராகக் களம் இறங்கிய திரு வி பொன்னம்பலம் அவர்களை அதிக வாக்கு வித்தியாசத்தால் தோற்கடித்தமை கவனிப்பிற்குரியது.

தந்தை செல்வா அவர்கள் நிறைந்த மனிதாபிமானம் கொண்டவர். தன் காலத்தில் பாரதத்தில் கண்ட காந்தியின் பாதையைப் பின்பற்றியவர். பின்பற்றுவது ஒன்றும் இலகுவான காரியம் அல்ல. பொதுவாக பின்பற்ற திறமை தேவைப்படும். ஆனால் காந்திஜீயைப் பின்பற்ற முதிர்ந்த பக்குவமும் வேண்டும். இந்தியாவில் காந்தியைப் பின் பற்றிய தலைவர்கள் என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. காந்தி என்ற பெயர் திருடப்பட்ட அளவிற்கு அங்கு காந்தீயத்தை பின் பற்றிய தலைவர்கள் எவருமில்லை.

தலைமைத்துவப் பஞ்சம் நிலவும் இன்றைய உலகில், தலைவர்களைப் பற்றிய தகவல்களை இளையோர் அதிகம் தெரிந்து கொள்வது ஆரோக்கியமானது. இறுதிக் காலத்தில் தீரக்கதரிசனம் மிக்க தந்தை செல்வா தமிழர்களை இனிக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. மார்ச் 31 அவரது பிறந்ந தினமாகும்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.