இலங்கையின் உள்விவகாரப் பிரச்சினைகளில் வெளிச் சக்திகள் தலையீடு செய்யக் கூடாதென ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார். உள்விவகாரப் பிரச்சினைகளுக்கு இலங்கைக்குள்ளேயே தீர்வு காண வெளிநாட்டு சக்திகள் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னர் சிற்றி பிரஸ் ஊடகத்திற்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஆலோசனை வழங்கும் முகமாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்க உத்தேசித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். மேற்குலக நாடுகள் பான் கீ மூனுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையா அல்லது வதந்தியா என்பது தமக்குத் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிகக் கொடிய பயங்கரவாத அமைப்பு என விடுதலைப்புலிகளை சாடியுள்ள அவர், அவாகளை இல்லாதொழித்து அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டிற்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென மேற்குலக நாடுகள் ஐ.நா செயலாளரைக் கோருவது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். உலகின் வேறும் சில நாடுகளில் கடுமையான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருகின்ற போதிலும் அவை தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படும் என தாம் கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான மேற்குலக நாடுகளின் அழுத்தங்களை சமாளிப்பதற்கு சீனா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் பொறிமுறை தொடர்பில் தமது நாட்டு சட்ட மா அதிபர், மனித உரிமைகள் பேரவைக்கு ஏற்கனவே விளக்கமளித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தல்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் செயற்பட மாட்டார் என தாம் கருதுவதாக டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.