Sunday, March 21, 2010

புனர்வாழ்வு என்ற பெயரில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் துன்புறுத்தல் புரிகின்றனர்!

புனர்வாழ்வளிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் 11,000 முன்னாள் விடுதலைப் புலி போராளிகளும் பாதுகாப்பு தரப்பினரால் துன்புறுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் வெளித்தொடர்புகள் அற்ற சிறப்பு தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் பல்வேறு துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படுவதுடன், காரணகாரியமற்ற நிலையில் காணாமல் போவதாகவும் கூறப்படுககின்றது.

விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற பெயரில் கைது செய்யப்படுகின்ற ஆண் மற்றும் பெண்கள் சட்டத்துக்கு முரணாக சிறிய சுதந்திரம் கூட இன்றி தடுத்து வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த செயற்பாடுகளை புனர்வாழ்வு என்ற பெயரில் அரசாங்கம் மறைத்து வருகிறது. இந்த குற்றச்சாட்டுகளை இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நிராகரித்துள்ளார்.

அவர்களில் பெரும்பானவர்கள் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்தவர்களாகையால் அவர்களை துன்புறுத்த வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாக கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஓரிரு தினத்திலேயே இராணுவ பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் குறித்த 11,000 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரே தவிர, ஒருவரும் இதுவரையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.