Sunday, December 13, 2009

அமெரிக்காவின் உதவி வேண்டுமா? இராணுவத்தில் தமிழர்கள் சேர்க்கப்படவேண்டும் ஒபாமா நிருவாகம் இலங்கைக்கு நிபந்தனை.


இலங்கையில் இறுதிக்கட்ட போரில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு ராணுவ உதவி செய்ய புதிய கட்டுப்பாடு விதிக்கும் மசோதாவை நிறைவேற்றி உள்ளது.

ஓரிரு நாளில் கட்டுப்பாடு

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சிங்கள ராணுவம் நடத்திய இறுதிக்கட்ட போரில் ஏராளமான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும், மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் பரவலாக குற்றச்சாற்று எழுந்துள்ளது. இப்பிரச்சினையை அமெரிக்கா கடுமையாக அணுக முடிவு செய்துள்ளது. இலங்கை ராணுவத்துக்கு ராணுவ உதவி செய்ய புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில்  நிறைவேற்றப்பட்ட, 2010 ஆம் ஆண்டின் நிதிஒதுக்க மசோதாவில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இம்மசோதா, செனட் சபையில் ஓரிரு நாளில் நிறைவேற்றப்பட உள்ளது.

அம்மசோதாவில், இலங்கைக்கு நிதி உதவி அளிப்பது குறித்து ஒரு பிரிவு இடம்பெற்றுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

போர் முடிந்த பிறகும், ஏராளமான தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு இருப்பதும், அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதலைப் பற்றி செய்தி வெளியிட்டவர்கள் மீது வழக்கு தொடரப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும் கவலை அளிக்கிறது.

தமிழர்கள் மற்றும் இதர சிறுபான்மை இனத்-தவருடன் நல்லிணக்கம் ஏற்பட இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததும் கவலை அளிக்கிறது.

இலங்கைமீது கட்டுப்பாடு

இறுதிக்கட்ட போரில் ஏராளமான படுகொலைகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் ஈடுபட்ட ராணுவத்தினரை சஸ்பெண்டு செய்தோ அல்லது நீதியின் முன்பு நிறுத்தியோ இலங்கை அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுத்து இருப்பதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், அமெரிக்க நிதிஒதுக்க கமிட்டியிடம் உறுதிப்படுத்த வேண்டும். அதுவரை, இலங்கைக்கு அமெரிக்கா ராணுவ உதவி எதுவும் அளிக்கக்கூடாது. இத்தகைய மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசோ, சர்வதேச அமைப்புகளோ விசாரணை நடத்தி இருக்கிறதா? என்றும் ஹிலாரி கிளிண்டன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும், இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படாவிட்டால், இலங்கைக்கு சர்வதேச நிதி நிறுவனங்கள் நிதி உதவி அளிக்கவிடாமல் அந்த நிறுவனங்களில் உள்ள அமெரிக்க செயல் இயக்குனர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். நிதி உதவி செய்வதற்கு எதிராக ஓட்டுப் போட வேண்டும்.

இந்த நிபந்தனைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்ட பிறகு, இலங்கைக்கு அளிக்கப்படும் அமெரிக்க ராணுவ உதவியை, சிங்-கள ராணுவத்தில் தமிழர்களை சேர்ப்பதற்கும், பயிற்சி அளிப்பதற்கும் இலங்கை அரசு பயன்படுத்த வேண்டும். சிங்கள ராணுவத்தினருக்கு தமிழ் மொழி பயிற்சி அளிப்பதற்கும், மனித உரிமை பயிற்சி அளிப்பதற்கும் இந்த நிதி உதவியை பயன்படுத்த வேண்டும். இப்படிச் செய்வதை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அம்மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.