Wednesday, December 23, 2009

இறுதிக்கால யுத்தம் குறித்து விஜய் நம்பியாரிடம் விளக்கம் கோராமல் இருப்பது ஏன்? இன்னசிற்றி பிறஸ் கேள்வியெழுப்பியுள்ளது

இலங்கையின் வன்னிப் பகுதியில் இடம்பெற்ற இறுதிநேர யுத்தத்தின் போது சரணடைய வந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டமை குறித்து ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்திடம் விரிவான விளக்கத்தினைக் கோரியுள்ள அதே சமயம் இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர்கள் தாம் சரணடையப் போவதாக அறிவித்தும் அது பற்றிய எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியாரிடம் விளக்கம் கோராமல் இருப்பது ஏன்? என இன்னசிற்றி பிறஸ் கேள்வியெழுப்பியுள்ளது.

இறுதிக்கால யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதியாக இலங்கைக்குச் சென்ற விஜய் நம்பியாரின் விஜயங்கள், தொடர்பாடல்கள் தொடர்பான சந்தேகங்களையும், புலம்பெயர் தமிழர்கள் நடத்திய போராட்டங்களை கண்டும் காணாமல் இருந்த ஐக்கியநாடுகளின் மெத்தனப் போக்குகளைத் தனது முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பில் கண்டித்துள்ள இன்னர்சிற்றி பிறஸ் தற்போது இந்தக் கேள்வியினை எழுப்பியுள்ளது.

சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் உத்தரவின் பேரில் இலங்கைப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தும்கூட இது விடயத்தில் அமெரிக்கா மௌனம் சாதித்துவருகிற அதேவேளை சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்று விளக்கமளிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் படுகொலைகள் விவகாரம் தொடர்பான பிரதிநிதி பிலப் அல்ஸ்டன் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

இந்தக் கோரிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கம் மிகச் சுலபமாக தனது மறுப்பறிக்கையையோ அல்லது விசாரணைகளை தாம் மேற்கொள்வதாகவோ ஒரு பதிலை வழங்கப்போவது உண்மை. ஏனெனில் வன்னியில் இடம்பெற்ற இறுத்தி யுத்தத்தில் அப்பாவிப் பொதுமக்கள் சிறிலங்கா படையினரால் சுட்டுக்கொல்லப்படும் காணொளியை சனல் – 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்த போது கூட இலங்கை அரசாங்கம் இதேமாதிரியான பதிலையே வெளியிட்டிருந்தது.

ஆகவே படுகொலை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சரணடைவதற்கு முன்னர் அவர்கள் தொடர்பு கொண்ட ஐ.நா. அதிகாரியான விஜய் நம்பியாரிடமே ஐக்கியநாடுகள் சபை முதலில் விளக்கம் கோரியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. இது தொடர்பாக விஜய் நம்பியாரிடம் விளக்கம் கோராதது ஏன்? – என்று இன்னர்சிற்றி பிறஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.