கனடிய தமிழர்கள் சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழ தனியரசே ஒரே அரசியல் தீர்வு என்ற செய்தியை இலங்கை உட்பட அனைத்துலக சமூகத்துக்கும் உறைப்பாக உணர்த்தியுள்ளார்கள். மீண்டும் வரலாற்றுப் புகழ்பெற்ற இந்த வாக்கெடுப்பை நடத்தி வரலாறு படைத்த அனைத்துத் தரப்பினரையும் பாராட்டி மகிழ்கிறோம். இவ்வாறு கனடிய படைப்பாளிகள் கழகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.கனடிய படைப்பாளிகள் கழகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் உரிய இயல்பான தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமையுடைய, சமய சார்பற்ற தமிழீழ அரசை மீள் எழுப்புதலும் மீள் உருவாக்குதலும் தவிர்க்க முடியாததாகி விட்டது என உலகுக்கு முழங்கிய வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீது நாடளாவிய கனடிய தமிழர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்குக் கணிப்பில் 48,583 (99.82 விழுக்காடு) வாக்காளர்கள் ஓம் என்றும் 85 வாக்குகள் (0.18) இல்லை என்றும் வாக்களித்துள்ளார்கள். பதினேழு வாக்குகள் செல்லுபடியாகாதென முடிவு செய்யப்பட்டது.
வரலாற்றுப் புகழ்பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு 99.82 விழுக்காடு கனடிய தமிழர்கள் வாக்களித்து வரலாறு படைத்துள்ளார்கள். கனடிய தமிழர்களின் தீர்ப்பு சிங்கள – பவுத்த பேரினவாத அரசு தாயகத்தில் ஏதிலி முகாம்களிலும் திறந்த வெளிச் சிறைகளிலும் பசி, பட்டினியோடு வாடும் எமது உறவுகளைத் தொடர்ந்து இராணுவப் பிடிக்குள் வைத்திருக்கவும் வன்னி மண்ணில் படைத் தளங்களை உருவாக்கி 100,000 சிங்கள இராணவத்தினரைக் குடியேற்றவும் திருகோணமலையில் மேம்பாடு என்ற போர்வையில் சிங்களக் குடியேற்றத்தை முடுக்கி விடவும் எடுக்கப்படும் பின்னணியில் இந்த வாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது.
வழக்கமாக ஒரு அரசு மட்டும் செய்யக் கூடிய பணியைக் கனடிய தமிழர் தேர்தலுக்கான கூட்டமைப்பு (Coalition for Tamil Elections Canada) வியக்கத்தக்க விதத்தில் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்தத் தேர்தலில் கடந்த இரண்டு மாதமாகப் பனியிலும் வீடு வீடாகச் சென்று கதவுகளைத் தட்டி வாக்காளர் பற்றிய தரவுகளை எறுப்பு போல் சுறுசுறுப்பாகத் திரட்டிய ஆயிரத்துக்கும் அதிகமான தொண்டர்களை நெஞ்சாரப் பாராட்டுகிறோம்.
தேர்தல் நாளன்று விறு விறுப்பாகவும் நேர்த்தியாகவும் நடத்திக் காட்டிய செயற்பாட்டாளர்கள், தொண்டர்கள், தேர்தல் அலுவலர்கள் அனைவரையும் மனதாரப் பராட்டுகிறோம். குறிப்பாக இளைய சமூகத்தினருக்கு எமது பாராட்டுதல்கள்.
தேர்தல் நாளன்று போக்குவரத்து வசதியற்ற வாக்காளர்களை மெச்சத்தக்க விதத்தில் தங்கள் சொந்த வண்டிகளில் ஏற்றி இறக்கிய தொண்டர்களை உளமாரப் பாராட்டுகிறோம்.
இந்தத் தேர்தலை மக்களாட்சி நெறிமுறைமைகளுக்கு இசைவாகவும் வெளிப்படையாகவும் அதே சமயம் இரகசியமாகவும் நடத்தி முடித்த ES&S என்ற தொழில்சார் கணிப்பு நிறுவனத்துக்கு எமது பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தேர்தல் வெற்றிகரமாக நடந்தேற வேண்டும் என வாழ்த்திய தமிழ்த் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், பெரியார் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, நாம் தமிழர் நிறுவனர் சீமான் போன்றோருக்கு எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
இந்தத் தேர்தல் பற்றிய செய்திகளை வெளியிட்டும் ஒலி, ஒளிபரப்புச் செய்த CBC, City Pulse 24, Globe and Mail, Inside Toronto, The Christian Science Monitor போன்ற கனடிய நீரோட்ட ஊடகங்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தேர்தல் பற்றிப் பரப்புரை செய்த தமிழ் ஊடகங்களுக்கு எமது பாராட்டுதல்கள். குறிப்பாக கனடிய தமிழ் வானொலி, தமிழ் ஸ்ரார் வானொலி, அனைத்துலக வானொலி, கீதவாணி, தமிழ்த் தொலைக்காட்சி, இணையதளங்கள் போன்ற ஊடகங்களுக்கு எமது பாராட்டுதல்கள்.
அவ்வப்போது வசதிக்கேற்ப காலம் புலிவேடம் போட்டு இப்போது அந்த வேடத்தைக் கலைத்துவிட்டு ஊரில் மழைபெய்தால் இங்கு குடை பிடிக்கிறார்கள் என வழக்கம் போல் நொட்டை சொல்வதையே தொழிலாகக் கொண்ட வானொலிக்கும் எமது “பாராட்டுதல்கள்.” மழைபெய்தால்தானே எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறது என்பதை நாம் அடையாளம் கண்டு கொள்ள முடியும்!
அதே சமயம் தேர்தலை முற்றாக ஒதுக்கிய ஊடகங்களைத் தேசியத்தை நேசிக்கும் எமது உறவுகள் இனம் கண்டு ஒதுக்க வேண்டும் என அழைப்பு விடுகிறோம்.
நாங்கள்தான் “கனடிய தமிழர்களின் ஒன்றுபட்ட குரல்” என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு இந்தத் தேர்தலை மதில்மேல் இருந்து வேடிக்கை பார்த்த கனடிய தமிழ்க் காங்கிரசுக்கும் எமது பாராட்டுதல்கள். இப்படி வேடிக்கை பார்த்ததன் மூலம் தாங்கள் யார் என்பதைத் தங்களை அறியாமலே கனடிய மக்களுக்கு இனம் காட்டிக்கொண்டு விட்டார்கள். இனிமேலாவது இப்படிச் சுயவிளம்பரம் செய்து மகிழ்வதை நிறுத்திக் கொள்வார்கள் என நம்புகிறோம்.
மொத்தம் கிடைத்த வாக்குகள் 50,000 தாண்டவில்லையே என்பது சிலருக்கு ஏமாற்றம் அளித்திருக்கிறது என்பது உண்மையே. இதற்கு முக்கிய காரணம் மொத்த வாக்காளர் எண்ணிக்கையை மிகைப்படுத்திப் பார்த்ததே.
பொதுவாக கனடாவில் நடைபெறும் மத்திய, மாகாண, உள்ளுர் தேர்தல்களில் வாக்களிக்கும் வாக்காளர்களது எண்ணிக்கை 50 – 60 விழுக்காட்டைத் தாண்டுவதில்லை. இந்த வாக்குக் கணிப்பில் வாக்களித்த தமிழர்களின் விழுக்காடு ஆகக் குறைந்தது 60 என வைத்துக் கொண்டால் மொத்த வாக்காளர் தொகை 80,972 ஆகவே இருக்கும். ஒரு வீட்டில் இருக்கும் 5 பேரில் 3 பேர் 18 அகவைக்கும் மேலானவர்கள் என்று வைத்துக் கொண்டால் கனடிய தமிழர்களின் மொத்த எண்ணிக்கை 134,953 மட்டுமே. எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் இந்த எண்ணிக்கையின் மேலெல்லை 175,000 என்பதே எமது இந்தப் பொழுது நிலைப்பாடாகும்.
எது எவ்வாறிருப்பினும் கனடிய தமிழர்களின் மொத்த எண்ணிக்கையையும் வாக்காளர்களின் எண்ணிக்கையையும் சரியாகக் கணக்கெடுக்கும் முயற்சியை கனடிய தமிழர் தேர்தலுக்கான கூட்டமைப்பு முன்னெடுக்க வேண்டும். அப்படியான முயற்சி கனடிய பொதுத் தேர்தல், அடுத்த ஆண்டு 2010 இல் நடக்க இருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல், மக்கள் அவைத் தேர்தல் ஆகியவற்றுக்கும் பயன்படும் என நம்புகிறோம்.
மொத்தத்தில் கனடிய தமிழர்கள் நோர்வே மற்றும் பிரான்ஸ் புலம்பெயர் தமிழ்மக்களைப் போன்று சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழ தனியரசே ஒரே அரசியல் தீர்வு என்ற செய்தியை சிறிலங்கா உட்பட அனைத்துலக சமூகத்துக்கும் உறைப்பாக உணர்த்தியுள்ளார்கள்.
இதே செய்தியைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சொல்லியுள்ளார்கள். அவர்கள் எடுக்கும் முடிவு புலம்பெயர் தமிழர்களது வேட்கைக்கு இசைவாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
மீண்டும் வரலாற்றுப் புகழ்பெற்ற இந்த வாக்கெடுப்பை நடத்தி வரலாறு படைத்த அனைத்துத் தரப்பினரையும் பாராட்டி மகிழ்கிறோம்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.