Tuesday, April 01, 2008

துணைப் படைக் கும்பலின் அட்டூழியத்தை எதிர்த்து கல்முனையில் முழு அடைப்புப் போராட்டம்

[செவ்வாய்க்கிழமை, 01 ஏப்ரல் 2008,] அம்பாறை மாவட்டம் கல்முனையில் சிறிலங்கா இராணுவத்தின் துணைப்படையான பிள்ளையான் கும்பலின் அட்டூழியத்தைக் கண்டு கொதித்தெழுந்த முஸ்லிம் கடல் தொழிலாளர்கள் பாரிய அளவிலான முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கல்முனை, கல்முனைக்குடி கடலில் அண்மைக்காலமாக தென்னிலங்கை மீனவர்கள் டைனமற் மற்றும் சுருக்கு வலை ஆகியனவற்றைப் பயன்படுத்தி கடல் தொழிலில் ஈடுபடுவது அதிகரித்திருப்பது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மற்றும் தமிழ் மீனவர்கள் தமது ஆட்சேபனையை கடந்த சில வாரங்களாக வெளிப்படுத்தி வந்தனர். தென்னிலங்கை மீனவர்களைக் கொண்டு வந்து கல்முனைக் கடலில் தொழிலில் ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்தியும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து கல்முனைக் கடலில் டைனமற், சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி கடல் தொழிலில் ஈடுபடக்கூடாது என்று இணக்கம் காணப்பட்டது. எனினும் தென்னிலங்கை கடல் தொழிலாளர்கள் அந்தப் பகுதி கடலில் தொடர்ந்தும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் பிள்ளையான் கும்பலும் உடந்தையாக இருந்தது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை முஸ்லிம் மீனவர்கள் சிலர் ஒன்றுகூடி தென்னிலங்கை கடல் தொழிலாளர்களைக் கொண்டுவந்து தமது கடல் பகுதியில் தொழிலில் ஈடுபடக்கூடாது என்றும் தமது வளங்களை தென்னிலங்கை கடல் தொழிலாளர்களைப் பயன்படுத்தி சுரண்ட தாம் அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பிள்ளையான் கும்பலைச் சேர்ந்தோர், சில முஸ்லிம் கடல் தொழிலாளர்களின் மீன்வாடிகளை நேற்று திங்கட்கிழமை மாலை 6:30 மணியளவில் தீயிட்டுக் கொளுத்தினர். இதனால் இருதரப்பிற்கும் இடையே கடும் முறுகல் நிலை ஏற்பட அந்தப் பகுதிக்கு உந்துருளியில் சென்ற துணைப்படைக் கும்பல், மீன்வாடிகளை நோக்கி துப்பாக்கிச் சூட்டை நடத்தி முஸ்லிம் கடல் தொழிலாளர்களை அச்சுறுத்தி அடாவடித்தனத்தில் ஈடுபட்டது. இதன்பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் வாகனம் ஒன்றில் அப்பகுதியிலுள்ள பள்ளிவாசல் முன்னபாக வந்திறங்கிய ஆயுதம் தரித்த பிள்ளையான் குழுவினர், அங்கே துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தமக்கு எதிராகச் செயற்பட்டால் அனைத்து முஸ்லிம்களையும் இந்தப் பகுதியில் இருந்து விரட்டி விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதனையடுத்து முஸ்லிம் கடல் தொழிலாளர்கள் பள்ளிவாசலில் பெருமளவு கூடி, பிள்ளையான் கும்பலுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தனர். மேலும் பிள்ளையான் குழுவிற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக பாரிய முழு அடைப்புப் போராட்டத்தை இன்று நடத்தவும் நேற்று இரவு முடிவு செய்யப்பட்டது. முஸ்லிம் கடல் தொழிலாளர்கள் இன்று காலை முதல் பாரிய முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். சுமார் 400-க்கும் அதிகமான கடல் தொழிலாளர்கள் இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பிரதேசத்தில் பிள்ளையான் கும்பலால் வன்முறை வெடிக்கலாம் என்ற அச்சம் அப்பகுதியில் நிலவி வருகிறது. முக்கியமான வீதிகள் சிலவற்றை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மூடியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் பள்ளிவாசல் தலைவர்களை சிறிலங்கா காவல்துறையினர் இன்று முற்பகல் சந்தித்துப் பேசியுள்ளனர். பிள்ளையான் கும்பலைச் சேர்ந்தோர், தமது பகுதிகளுக்கு இனிமேல் வரக்கூடாது என்று பள்ளிவாசல் தலைவர்கள் காவல்துறையினரிடம் வலியுறுத்தியுள்ளனர். அதற்கு காவல்துறையினர் இணங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.