[சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2008]
சிங்கள அரசின் போர் நடவடிக்கைகளுக்கு வட போர்முனையிலும் மன்னார் களமுனைகளிலும் தகுந்த பதிலடி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பதிலடி சிங்கள அரசை ஆட்டம் காண வைத்துள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை மாணவர்கள் மத்தியில் அவர் உரையாற்றியதாவது:
சிறிலங்கா அரசைப் பொறுத்த வரையில் இன்று எல்லோரையுமே போராளிகளாக எண்ணி வான் தாக்குதலை நடத்தி வருகிறது.
சிறிலங்கா அரசுக்கும், போராளிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான வேறுபாட்டைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
போராளிகளாக எண்ணி தாக்குதலை ஒட்டுமொத்தமாக தமிழர்கள் மீது நடத்தும் சிறிலங்கா அரசுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய நிலையில் உள்ளோம்.
விடுதலைப் போராட்டம் என்பது ஆயுதப் பயன்பாட்டில் மட்டும் தங்கியிருப்பது அல்ல.
மக்கள் என்ற மாபெரும் சக்தியிலேயே தங்கியுள்ளது.
உலகில் மக்கள் ஆதரவு மிகுந்த விடுதலைப் போராட்டங்கள் தான் விடுதலை பெற்று நாடுகளை அமைத்துள்ளன.
நாமும் வல்லரசுகளின் துணையுடன் எமக்கு எதிராக போர் புரிந்து கொண்டிருக்கும் கொடிய சிங்கள அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றோம்.
சிங்கள அரசு இளைய தலைமுறையை அழித்து தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழிக்க வேண்டும் என்பதில் கங்கணம் கட்டி செயற்பட்டு வருகின்றது.
அதன் வெளிப்பாடுகளாகவே பல முனைகளில் எம் மண் மீது வன்பறிப்புப் போரைத் தொடுத்துள்ளது.
சிங்கள அரசின் கொடிய போரை கைகளைக் கட்டிக்கொண்டு தமிழர் நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
சிங்கள தேசத்தில் தமிழர்களுக்கு எதிராக போரைத் தொடுப்பதற்கு சிங்கள ஆசிரியர்களும் ஏன் பௌத்த பிக்குகளும் சிங்களப் படைகளுக்கு ஆட்களைத் திரட்டுகின்றனர்.
இந்த நிலையில் தமிழர்கள் நாம் ஓரணியில் திரண்டு போராட வேண்டிய நிலையில் உள்ளோம்.
எமக்குப் பெரிய பலம் மாணவர் சக்தி தான். உலகிலேயே பல விடுதலைப் போராட்டங்களில் புரட்சிகள் நடைபெற்ற தேசங்களில் மாணவர்களே போராட்டங்களை முன்னின்று நடத்தி வெற்றியும் பெற்றிருக்கின்றனர்.
இந்த நிலையில் மாணவர் சக்தியை கொடிய போரைத் திணித்துள்ள சிங்கள அரசின் செயற்பாட்டிற்கு எதிராக பயன்படுத்த வேண்டும்.
சிங்கள அரசின் போர் நடவடிக்கைகளுக்கு வட போர்முனையிலும் மன்னார் களமுனைகளிலும் தகுந்த பதிலடி வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பதிலடி சிங்கள அரசை ஆட்டம் காண வைத்துள்ளது.
தமிழீழத் தேசியத் தலைவரின் தலைமையில் தமிழர்களின் வீரமரபு போர்க்களங்களில் வெளிப்பட்டு வருகின்றன.
போரைத் திணித்துள்ள சிங்கள அரசுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடி சகல அடக்குமுறைகளையும் உடைத்து எறிய வேண்டும் என்றார் பா.நடேசன்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.