Thursday, April 24, 2008

கிழக்கு தேர்தலைத் தடுக்க இந்திய தலையீடு அவசியம்: தமிழக முதல்வருக்கு தொல். திருமாவளவன் வேண்டுகோள்

[வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2008,]

ஈழதேசத்தின் வடகிழக்கு மாகாணத்தை பிரித்து கிழக்குப் பிரதேசத்தில் தேர்தல் நடத்துவதை தடுக்க இந்திய அரசினது தலையீடு அவசியம் என்பதை இந்திய அரசுக்கு தமிழக முதல்வர் சுட்டிக் காட்ட வேண்டும் என்று தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் இன்று வியாழக்கிழமையன்று தொல். திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கை:

தமிழக சட்டப்பேரவையில் 23.4.08 அன்று ஈழத் தமிழர் சிக்கல் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு உரிய முய்ற்சிகளை மேற்கொள்ள வேஎண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈழத்தில் அரசியல் நெடுக்கடிகள் நிறைந்த இந்தச் சூழலில் இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது உலகத் தமிழர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மறைந்த ராசீவ் முயற்சியில் உருவான இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி ஈழ தேசத்தின் வடகிழக்கு மாகாணத்தை ஒருபோதும் பிரிக்கக் கூடாது என உறுதி செய்யப்பட்டது.

ஆனால் தற்போது சிங்கள இனவெறி அரசு இவ்வொப்பந்தத்துக்கு எதிரான வகையில் வடகிழக்கு மாகாணத்தை அரசியல் ரீதியாக இரண்டாகப் பிரித்து தனித்தனியே சட்டப்பேரவைக்கான தேர்தல்களை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது.

பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தில் எதிர் வரும் 28ஆம் நாள் முதல் அஞ்சல் வழி வாக்குப் பதிவு தொடங்க உள்ளது.

இவ்வாறான சூழலில்தான்

இந்திய- இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக-

ராசீவுக்கு எதிராக-

இந்திய அரசுக்கு எதிராக-

வடகிழக்கு மாகாணத்தை பிரிக்கும் சிங்கள இனவெறிக் கும்பலின் சதியை முறியடித்திட இந்திய அரசு உடனே தலையிட வேண்டும் என்று வலியுறுத்துகிற வகையிலும்

அங்கே நடைபெற உள்ள தேர்தலை தடுப்பதற்கோ அல்லது தள்ளிவைப்பதற்கோ ஏற்ற வகையில் இந்திய அரசின் தலையீடு தேர்தல் நடைமுறை தொடங்குவதற்கு முன்னதாகவே இருந்திட வேண்டும் என்று வலியுறுத்துகிற வகையிலும் தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

என்று விடுதலைச் சிறுத்தைகள்-பாமக- மதிமுக ஆகிய கட்சிகளின் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் முன்மொழியப்பட்டது.

ஆனால் அதனை சட்டப்பேரவையில் ஒத்திவைப்புத் தீர்மானமாக அனுமதிக்கவில்லை என்றாலும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக விவாதிப்பதற்கு தமிழக முதல்வர் அனுமதி அளித்ததோடு இந்திய அரசின் தலையீட்டை வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதற்கு மனமார்ந்த நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிரான சிங்கள அரசின் சதி முயற்சி தொடர்பாகவும் வடகிழக்கு மாகாணத்தை அரசியல் ரீதியாக பிரிப்பதை இந்திய அரசு தடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் தீர்மானத்தில் ஏதும் இல்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.

எனவே முதல்வர் கலைஞர், ஈழதேசத்தை கூறுபோடும் சிங்கள இனவெறிக் கும்பலின் அரசியல் சதியை முறியடித்திட இந்திய அரசின் தலையீடு தவிர்க்க முடியாத தேவையாக உள்ளது என்பதை இந்திய அரசுக்கு சுட்டிக்காட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதினம்.கொம்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.