Tuesday, April 01, 2008

சென்னை சிறிலங்கா துணைத் தூதுவர் அம்சாவை வெளியேற்றக் கோரி விரைவில் மாபெரும் கூட்டு ஆர்ப்பாட்டம்: பேரா.சுப.வீரபாண்டியன்

[செவ்வாய்க்கிழமை, 01 ஏப்ரல் 2008]

தமிழ்நாட்டுத் தலைநகர் சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதுவர் அம்சாவை வெளியேற்றக் கோரி விரைவில் தமிழகத்தின் அனைத்து இயக்கங்களின் சார்பில் மாபெரும் கூட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக திராவிட இயக்க தமிழர் பேரவையின் அமைப்பாளர் பேரா.சுப. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகிய "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு இன்று செவ்வாய்க்கிழமை அவர் அளித்த நேர்காணலில் இது தொடர்பாக கூறியுள்ளதாவது:

சென்னையிலே உள்ள சிறிலங்கா துணைத் தூதுவரான அம்சா என்கிற மனிதன் தான் தமிழ்நாட்டில் அமர்ந்துகொண்டு எத்தனை குழப்பங்களைச் செய்ய முடியுமோ அத்தனை குழப்பங்களையும் முறையற்ற வழிகளிலே செய்து கொண்டிருக்கிறார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக நடைபெற்ற ஏறத்தாழ 5 ஆயிரம் பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், வாரந்தோறும் பத்திரிகையாளர்களை அழைத்து விருந்து என்ற பெயரில் தகாத முறையில் லஞ்சக் கையூட்டுகளையெல்லாம் கொடுத்து, பத்திரிகையாளர்களின் கண்ணியத்தையும் குறைத்து பொய்யான செய்திகளை வெளியிட இந்த அம்சா ஏற்பாடு செய்கிறார் என்று சொல்லியிருந்தார்.

ஒருமுறை தமிழக முதல்வர் கலைஞரை நான் சந்தித்தபோதுகூட இந்த அம்சா என்ற நபரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நீங்கள் புதுடில்லிக்கு வலிமையாக முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

ஒரு பொது ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் இந்தக் கருத்தை வலியுறுத்திப் பேசினார்.

அம்சா என்கிற அந்த நபர் இங்கே அமர்ந்து கொண்டு எல்லாவித கண்ணியமற்ற- முறைகேடான செயல்களையும் செய்கிறார். உண்மைக்கு மாறான செய்திகளை தமிழகத்திலே பரப்ப முயற்சிக்கிறார்.

எனவே அம்சாவுக்கு எதிராகவே ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை மிக விரைவில் நடத்த தமிழகத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும் முடிவெடுத்திருக்கிறோம். அதற்கான முயற்சிகளையும் நாங்கள் இப்போது மேற்கொண்டிருக்கிறோம் என்றார் சுப.வீரபாண்டியன்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.