Wednesday, March 19, 2008

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இளம்பெண்களுக்கு பாதுகாப்பில்லை அகதியாக வந்த மாணவி

[புதன்கிழமை, 19 மார்ச் 2008]

இராணுவக் கட்டுப்பாட்டில் வசித்து வந்தாலும் பாதுகாப்பு இல்லாததால் பாடசாலைக்குச் செல்ல முடியவில்லை. நடமாடித் திரியும் இளம் பெண்கள் கடத்தப்படுகின்றனர். பின்னர் அவர்கள் உயிருடன் திரும்புவதும் இல்லை. இவ்வாறு தலைமன்னார் மற்றும் வவுனியா பகுதிகளில் இருந்து நேற்று முன்தினம் தனுஷ்கோடி வந்தடைந்த ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 23 அகதிகளில் ஒருவரான விஜயதர்சினி (வயது 17) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இராணுவத்தினரால் கடத்தப்படும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பாடசாலைக்குக் கூட செல்ல முடிவதில்லை. கடத்திச் செல்லப்படுவோர் உயிருடன் திரும்புவதும் இல்லை. வீட்டில் இருந்தாலும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு துன்புறுத்தப்படுகிறோம். தற்போது பரீட்சை முடிவடைந்த நிலையில் உயிருக்கு பயந்து பெற்றோருடன் அகதியாக வந்துள்ளோம் என்றார். மேலும் இவரது தாயாரான ஞானசுந்தரி (வயது 38) கூறுகையில் :

இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது. ஒரு கிலோ அரிசி 80 ரூபாவிற்கும், காய்கறிகள் 60 ரூபாவிற்கும் ஒரு தேங்காய் 50 ரூபாவிற்கும் விற்கப்படுகின்றன. குழந்தைகளுக்குத் தேவையான பால்மா பொருட்கள் கிடைப்பதேயில்லை என்றார். மீனவர் ராஜசேகர் (வயது 28) கூறியதாவது:

இலங்கைநெடுந்தீவு பகுதியில் கண்ணிவெடிகளை மிதக்கவிட்டிருப்பதாக கடற்படையினர் எச்சரித்துவருகின்றனர். இதனால் அந்தப்பகுதியில் மீன்பிடிக்க செல்லமுடியாது. ஒரு லீற்றர் 93 ரூபா என்ற விலையில் ஒரு படகுக்கு 15 லீற்றர் மண்ணெண்ணெய் மட்டுமே கொடுக்க அரசு அனுமதிக்கிறது. அது கடலுக்கு சென்று திரும்புவதற்கே போதுமானதாக இருப்பதில்லை. இந்நிலையில், இரவு நேரத்தில் மீன் பிடிக்கக் கூடாது என்று எமக்கு கடற்படையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.