Wednesday, March 19, 2008

சிறிலங்கா அரசுக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் கடும் கண்டனம்: அந்தரங்கத்தை அம்பலப்படுத்தியதால் விசனம்

[புதன்கிழமை, 19 மார்ச் 2008,]

சிறிலங்காவில் நீதிக்குப் புறம்பான கொலைகளும் காணமல் போதலும் பயங்கரமான நிகழ்வுகளாகி விட்ட போதும், சிறிலங்கா அரசாங்கத்துக்கு மாத்திரம் தாம் சமர்ப்பித்த அந்தரங்க அறிக்கையை பகிரங்கப்படுத்தி பகிர்ந்து கொண்டமைக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
.
இந்த அறிக்கையின் மூலம் சிறிலங்கா அரசாங்கமும், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமும் அந்தரங்கமான தொடர்புகளைப் பேணி வருவதும், மனித உரிமை மீறல்கள் குறித்த உண்மைக்குப் புறம்பான தகவலை அரசுக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் வழங்கியமையும் அம்பலமாகியிருக்கிறது.

இது குறித்து அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காணாமல் போதல் தொடர்பான தமது அந்தரங்க தகவல்களை தவறாக வழிநடத்தும் நோக்குடன் பகிரங்கப்படுத்தியமை தொடர்பில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தனது கடுமையான கண்டனத்தை சிறிலங்காவிற்கு தெரிவித்துக் கொள்கிறது.

மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய அமெரிக்க இராஜாங்க அமைச்சு வெளியிட்ட 2007 ஆம் ஆண்டுக்கான நாட்டறிக்கைக்கு பதிலளிக்கும் விதத்தில் 2008 மார்ச் 15 ஆம் நாள் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் "2007 ஆம் ஆண்டின் இரண்டாம் மூன்றாம் காலப்பகுதியில் காணாமல் போதல் மற்றும் காரணமற்ற கொலைகள் குறிப்பிடக்கூடிய விதத்தில் குறைவடைந்து செல்கின்றது" என்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்பட்டிருந்தது.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அவதானிப்புக்களின்படி நிலமை திருந்தியுள்ளது என்று வெளிவிவகார அமைச்சு அதில் கூறியிருந்தது. அத்துடன் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அந்தரங்க அறிக்கைகளை ஐக்கிய அமெரிக்க தூதரகம் பெற்றுக்கொண்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிறிலங்கா அரசாங்கத்துக்கு மாத்திரம் தாம் சமர்ப்பித்த அந்தரங்க அறிக்கையினை இவ்விதம் பகிரங்கப்படுத்தி பகிர்ந்து கொண்டமையையும் தனது முழுக் கண்டறிதல்கள் தொடர்பில் தான் அரசுடன் நடாத்தும் கருத்தாடல்கள் மட்டில் வெளிவிவகார அமைச்சின் தவறான தகவலினையும் அனைத்துலகம் செஞ்சிலுவைச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

நீதிக்குப் புறம்பான கொலைகளும் காணமல் போதலும் இலங்கையில் இடம்பெறும் பயங்கரமான தகாத நிகழ்வுகளின் ஒரு பகுதிகளாகிவிட்டன. இவை நிறுத்தப்பட வேண்டும் என்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் தெற்காசிய நாடுகளின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான ஐக் டி மய்யோ குறிப்பிட்டுள்ளார்.

இவை தொடர்பில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அந்தரங்கமாகவும் நேரடியாகவும் உரையாட முற்படுகின்றது. இதன் காரணமாகவே இலங்கையில் நடைபெறும் பல காணமற் போதல் சம்பவங்கள் மட்டில் நாம் கருத்துக்களை பகிரங்கமாக தெரிவிப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

உலகம் முழுவதிலும் ஆயுத மோதல்கள் மற்றும் வன்முறைகளினால் பாதிக்கப்படுவோரை பாதுகாத்து உதவியளிக்கும் அனைத்துலக ஆணை அதிகாரத்தை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் கொண்டுள்ளது. பிரத்தியேகமானதொரு மனிதாபிமான நிறுவனம் என்ற அடிப்படையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் இக்கடமையினை நடுநிலைமை, பக்கசார்பின்மை என்னும் கொள்கைகளை கண்டிப்புடன் கடைப்பிடித்து நிறைவேற்றி வருகின்றது.

சிறிலங்காவில், அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட மோதல்களில் சம்பந்தப்படும் சகல தரப்பினருடனும், பலவந்தமாக காணாமல் ஆக்குதல் போன்ற அனைத்துலக மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில், தொடர்ச்சியான கலந்துரையாடல்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் நடத்தி வருகின்றது.

மீறல்களை நிறுத்தவும் அவை மீண்டும் இடம்பெறாதவாறு தடுக்கவும் வேண்டிய சகல நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுவருகின்றது. அனைத்துலக மனிதாபிமான சட்டமீறல்களால் பாதிக்கப்பட்ட ஆட்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்க்கு உதவி செய்வதற்கான தனக்கிருக்கும் மிகச் சிறந்த வழி இது என்னும் வகையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அரசாங்கத்துடன் அந்தரங்க தொடர்புகளைப் அர்ப்பணிப்புடன் பேணி வருகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.