Thursday, March 20, 2008

பேச்சுவார்த்தைதான் தீர்வு என்று கூறிக்கொணடே போர்ப் பயிற்சியா?: இந்திய அரசுக்கு திராவிடர் கழகம் கண்டனம்.

[வியாழக்கிழமை, 20 மார்ச் 2008]

இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைதான் தீர்வு என்று கூறிக்கொண்டே சிறிலங்கா இராணுவத்துக்கு இந்திய அரசாங்கம் போர்ப் பயிற்சி அளிப்பதற்கு தமிழ்நாட்டின் திராவிடர் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நோர்வே நாட்டின் சமாதான முயற்சியால் 6 ஆண்டுகள் நடைமுறையில் இருந்த போர் நிறுத்த ஒப்பந்தம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் நாள், தற்போதைய அதிபர் ராஜபக்சவின் சிங்கள இனவெறிப் போக்கால் ஒரு தரப்பாக முறித்துக்கொள்ளப்பட்டது.

ராஜபக்சவின் இனவாதப் போக்கினை இன்று உலகம் முழுவதும் தெரிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டு விட்டது. பேச்சுவார்த்தைக்கு இலங்கை அதிபர் ராஜபக்ச போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று இங்கிலாந்து நாடாளுமன்றத்திலேயே குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

போரின் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு இல்லை என்று மற்ற நாடுகளைப் போல் இந்திய அரசும் கூறியுள்ளது. இது சரியான நிலைப்பாடு தான். அதே நேரத்தில், இலங்கை அரசின் போர் நடவடிக்கைகளுக்கு உதவுவது போல் இந்திய அரசு நடந்து கொள்ளலாமா? என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது.

இந்திய இராணுவம் இலங்கை அரசுக்கு எந்த வகையில் உதவுகிறது என்பதைப் பட்டியல் போட்டே சொல்லுகிறார் சிங்களக் கடற்படைத் தளபதி. பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அதனை அவர் விவரித்துள்ளார். சமீபத்தில் இந்தியா வந்த இலங்கையின் இராணுவத் தளபதிக்கு, இந்திய அரசின் சார்பில் சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு பேச்சுவார்த்தை தான் என்று இந்திய அரசு ஒரு பக்கத்தில் சொல்லிக்கொண்டே, இன்னொரு பக்கத்தில் இலங்கைக்கு போர்ப் பயிற்சி அளிப்பது என்பது முரண்பாடு அல்லவா?

விடுதலைப் புலிகளை பொறுத்தவரையில், அவர்களின் நிலைப்பாடு தெளிவாகவும், நியாயமானதாகவும் உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை முதலில் முறித்துக்கொண்டது இலங்கை இராணுவம் தான். எனவே, அவர்கள் தான் போரை நிறுத்த வேண்டும். அதற்கு ஒத்துழைப்பு தருவதாக போராளிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு, இந்திய அரசு தலையீட்டு, சுமூகமான, நிரந்தரமான, அமைதிக்கு பங்கம் இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்த, ஆக்கபூர்வமாக முயல வேண்டும் என்று இந்திய அரசை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை இங்கு நிலவும் உணர்வு, தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பை ஆதரிக்கும் உணர்வு என்று நினைப்பதனை விட, ஈழத்தில் வாழ்வுரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்களின் மீதான மனிதாபிமான இன உணர்வு என்று ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வை சட்டம் போட்டோ, ஊடகங்கள் மூலமாகவோ நசுக்கி விடலாம் என்று நினைப்பது வீண் வேலை என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.