Sunday, March 23, 2008
புதிய வகை கடலடித் தாக்குதல்?: முல்லை. கடற்பரப்பில் சிறிலங்காவின் டோறாப் படகு மூழ்கடிப்பு- 14 படையினர் பலி
[ஞாயிற்றுக்கிழமை, 23 மார்ச் 2008]
முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப்படகு ஒன்று கடற்புலிகளால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இம் மோதலில் கடற்படையினர் தரப்பில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கடற் கரும்புலிகள் மூவர் வீரச்சாவைத் தழுவியுள்ளனர்.
நாயாறு கடற்பரப்பில் சனிக்கிழமை அதிகாலை 2:00 மணிக்கு கடற்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளுக்கும் இடையில் மோதல் தொடங்கியது. இம் மோதல் அதிகாலை 2:45 மணிவரை நீடித்தது.
மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை அதிகாலை 2:10 மணியளவில் கடற்படையின் அதிவேக டோறா பீரங்கிப்படகு ஒன்று விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.
இதில் சென்ற கடற்படையினரில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
டோறா மூழ்கடிக்கப்பட்ட இத்தாக்குதலில் 3 கரும்புலிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.
கடற்கரும்புலிகளான
லெப். கேணல் அன்புமாறன்
மேஜர் நிரஞ்சனி
மேஜர் கனிநிலா
ஆகியோர் வீரவரலாறாகினர்.
வீரச்சாவைத் தழுவிய கரும்புலிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் வீரவணக்கத்தை செலுத்தியுள்ளனர்.
கடற்புலிகளால் இன்று தாக்கி மூழ்கடிக்கப்பட்ட டோறா பீரங்கிப்படகு சிறிலங்காவில் கட்டப்பட்ட பி-438 என்ற தொடர் இலக்கத்தை கொண்டதாகும்.
மூழ்கடிக்கப்பட்ட படகில் இருந்த அதிகாரி உட்பட 6 படையினர் நீந்தித்தப்பியதாகவும், 10 படையினர் காணாமல் போய் உள்ளதாகவும், படகின் கீழ்ப்பகுதியில் பாரிய வெடிப்பு ஏற்பட்டதாகவும், அதனால் அதன் கீழ்ப்பகுதி பிரிந்து மூழ்கியதாகவும் தப்பிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடைபெற்ற குறுகிய நேரத்திலேயே படகு மூழ்கி விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடலில் மோதல் எதுவும் நடக்காமல் திடீரென இந்த வெடிப்புத்தாக்குதல் நடைபெற்றதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட புதிய வகை கடலடித்தாக்குதல் வெடிகருவியாக அது இருக்கலாம் என்ற தாம் ஐயப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.