Monday, February 11, 2008
போரினால் தென்னிலங்கை சிறுவர்களின் கல்வி பாதிப்பு: கொழும்பு ஊடகம் கவலை
[திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2008]
இலங்கை முழுவதும் தற்போது பரவியுள்ள போரினால் தென்னிலங்கையில் மாணவர்களின் கல்வி பெரும் பாதிப்படைந்துள்ளதாகவும், பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் கொழும்பிலிருந்து வெளிவரும் "த நேசன்" வார ஏடு கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கைத்தீவை அச்சம் சூழ்ந்துள்ளது. தென்னிலங்கையில் உள்ள குடும்பங்கள் தாம் வாழ்வதற்கு அமைதியான, பாதுகாப்பான இடத்தை தேடுகின்றனர். பிள்ளைகளின் கல்வி மிக முக்கியமானது. அவர்களின் பாடசாலை நாட்கள் பாதிப்படைந்தால் கல்வியும் பாதிப்படையும்.
இவ்வாறு நிகழ்ந்தால் பெற்றோரினால் தமது பிள்ளைகளுக்கு உதவ முடியாது. எனினும் தற்போதைய நிலமைகள் விரைவில் சீராகும் என அவர்கள் நம்புகின்றனர்.
நாட்டின் தற்போதைய நிலமை மேலும் மோசமடையுமா அல்லது இது ஒரு தற்காலிகமானதா என்பது தொடர்பாக எமக்கு எதுவும் தெரியாது. ஆனால் ஒன்றில் மட்டும் நாம் உறுதியாக உள்ளோம். எமது பிள்ளைகளின் வாழ்க்கையை ஆபத்தில் தள்ள முடியாது என பெற்றோர்களில் ஒருவரான மொகிடீன் தெரிவித்துள்ளார்.
சில பெற்றோர் தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பவும் விரும்புகின்றனர். அவர்கள் அங்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என அவர்கள் நம்புகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
மற்றுமொரு மாணவரின் பெற்றோர்களில் ஒருவர் கருத்து தெரிவிக்ககையில் "ஒவ்வொரு தடவையும் எமது பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போதும் பாதுகாப்பாக திரும்பி வருவார்களா என்ற அச்சம் எமக்குள் எழுகின்றது. இந்த அச்சமான மனநிலை எமக்குள் ஒவ்வொரு நாளும் ஏற்படுகின்றது" என தெரிவித்துள்ளார்.
இதனிடையே நாட்டின் தற்போதைய நிலமை தொடரக்கூடாது என நாம் விரும்புகின்றோம். ஏனெனில் மாணவர்களுக்கு பாடசாலையின் ஒவ்வொரு தவணையும் மிக முக்கியமானது என தென்னிலங்கை அரச பாடசாலை ஒன்றின் மூத்த ஆசிரியை ஒருவர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் தவறவிடும் தமது நாட்களையும், வாரங்களையும் மீண்டும் நிறைவு செய்வது கடினமானது. ஏனெனில் அவர்கள் பழைய நிலமைக்கு திரும்புவதற்கு நாட்கள் எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பெற்றோரின் அச்சத்தை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. எனினும் அவர்கள் மிக அதிகமாக அச்சப்படுவதில் அர்த்தமில்லை என அனைத்துலக பாடசாலை ஒன்றின் உப அதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியின் அதிபர் கருத்து தெரிவிக்கும் போது "பாடசாலைகளை மூடும் அரசின் முடிவு குறுகிய காலம் கொண்டதே" என தெரிவித்தார்.
பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு பாடசாலைகளை ஒரு வாரத்திற்கு மூடுமாறே நாம் கேட்டிருந்தோம். அது ஒரு பெரிய காலமல்ல எனவே அச்சமடைவதில் காரணமில்லை என கல்வி அமைச்சின் ஊடகத்துறை செயலாளர் ஜே.தெல்பகொட தெரிவித்துள்ளார்.
எனினும் பாடசாலைகளுக்கு அரசாங்கத்தின் உத்தரவுகளைக் கடைப்பிடிப்பதனைத் தவிர வேறு வழிகள் இருக்கவில்லை என கொழும்பின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான றோயல் கல்லூரியின் அதிபர் உபாலி குணசேகர தெரிவித்தார்.
எனவே நாம் விடுமுறைகளை குறைத்து கடுமையாக உழைக்க வேண்டும். அதனைத் தவிர எதனையும் செய்ய முடியாது. யாரும் பேரழிவுகளை காணத் தயாராக இல்லை. புறக்கோட்டை குண்டுவெடிப்பு போன்றன மீண்டும் நிகழக்கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு இடையில் நடைபெறவிருந்த விளையாட்டுப் போட்டிகளை அரசாங்கம் தடை செய்திருந்ததும் மணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளதாக க.பொ.த. சாதாரண தர மாணவரான சஜித் குணரத்தின தெரிவித்தார்.
எனக்கு துடுப்பாட்டம் மிகவும் விரும்பம். தொடாந்து படிப்பது சலிப்பை தரும். எனவே துடுப்பாட்டம் சலிப்பைப் போக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாட்டின் மோசமான நிலமை தற்போது சிறுவர்களையும் பாதிக்கும் நிலையை அடைந்துவிட்டது என சஜித்தின் தாயார் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
பேரூந்துகள், பேருந்து மற்றும் தொடருந்து நிலையங்கள், பொது இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்கள் மாணவர்களின் மனநிலையை வெகுவாக பாதித்துள்ளது. அவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தற்போது அச்சப்படுகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இது நாட்டின் ஒரு சில பகுதிகளில் தோன்றியுள்ள நிலமையல்ல. நாடு முழுவதையும் தற்போது காரிருள் சூழ்ந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போரில் ஏராளமான தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்டும், பாடசாலைகள் குண்டுவீசி அழிக்கப்பட்டும் வந்த போது பெருமளவான தமிழ் மாணவர்களின் கல்வித்தரம் முற்றாகவே அழிந்து போயிருந்தது. ஆனால் அந்த வேதனை என்ன என்பது தற்போது தான் தென்னிலங்கை மக்கள் உணரத்தலைப்பட்டுள்ளனர் என இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது தமிழ் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது தென்னிலங்கை மக்கள் அனுபவித்து வரும் துன்பமானது தமிழ் மக்கள் அனுபவித்து வருவதில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட கிடையாது. ஏனெனில் மாணவர்களுடன் சேர்த்து பாடசாலைகள் எவையும் தென்னிலங்கையில் குண்டு வைத்தோ அல்லது குண்டுவீசியோ அழிக்கப்படவில்லை.
22.09.1995 அன்று நாகர்கோவில் பாடசாலை மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 26-க்கும் அதிகமான மாணவர்களும், 1995 ஆம் ஆண்டு நவாலி தேவாலயம் மீதான குண்டு வீச்சில் 40-க்கும் அதிகமான மாணவர்களுடன் 165-க்கும் அதிகமான மக்களும், 2006 ஆம் ஆண்டு முல்லைத்தீவு வல்லிபுனத்தில் நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 60-க்கும் அதிகமான மாணவர்களும், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் மன்னார் பகுதியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் 12-க்கும் அதிகமான மாணவர்கள் கொல்லப்பட்டதும் அவற்றில் சில என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.