Saturday, December 29, 2007

நெடுந்தீவு கடற்சமர் கடற்படையினரை திசை திருப்பும் உத்தி: "டெய்லி மிரர்" நாளேடு

[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2007] ஆழ்கடலில் வைத்து ஆயுதங்களை இறக்கும் பொருட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் கடற்படையினரின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே நெடுந்தீவு கடற்சமரில் ஈடுபட்டிருந்தனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான "டெய்லி மிரர்" தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த புதன்கிழமை காலை 7:45 மணியளவில் கொழும்பு டொக்கியாட்டில் கட்டப்பட்ட டோரா அதிவேக தாக்குதல் பீரங்கிப் படகு (P-413) லெப். கொமாண்டர் லலித் எக்கநாயக்க தலைமையில் நெடுந்தீவு கடற்பகுதியில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்தது. அந்தப் படகில் மேலும் 13 கடற்படையினர் இருந்தனர். திடீரென மன்னாரின் விடத்தல்தீவுக்கு அண்மையாக உள்ள நாச்சிக்குடாப் பகுதியில் இருந்து கடற்புலிகளின் படகுகள் கடற்படை படகை நோக்கி வருவது அவதானிக்கப்பட்டது. கடற்புலிகளின் படகுகளை அவதானித்த லலித் எக்கநாயக்க, அவற்றைத் தாக்குவதற்கு தயாரானதுடன், கள நிலைமைகளை கடற்படையின் வடபிராந்திய கட்டளைப்பீடத்திற்கு தெரியப்படுத்தியதுடன், அதனூடாக கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்திற்கும் உடனுக்குடன் தகவல்கள் அனுப்பப்பட்டன. அந்தப் பகுதியின் கடலின் ஆழம் குறைவாக இருப்பதனால் கடற்புலிகளின் படகுகளில் இருந்து விலகி இருக்கும் படி கடற்படை தளபதி வசந்த கரனகொட, லலித் எக்கநாயக்கவுக்கு தெரிவித்திருந்தார். அதேசமயம் மேற்கு மற்றும் வடக்கு கடற்பகுதிகளில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த பல டோராப் பீரங்கி படகுகளும் அந்தப் பகுதிக்கு அழைக்கப்பட்டன. முதலில் 10-க்கும் குறைவான கடற்புலிப் படகுகளே அந்தப் பகுதியில் காணப்பட்ட போதும், பின்னர் மேலதிக படகுகளும் அந்தப் பகுதியை வந்தடைந்தன. கடற்புலிகளின் இரு படகுகள் தமது படைபலத்தை ஒன்றிணைத்தவாறு அந்தப் பகுதிக்கு விரைந்தன. அதன் போது அங்கு 7 டோராப் படகுகள் வந்தடைந்ததுடன், தாக்குதலுக்கும் தயாராகின. ஆரம்பத்தில் கடற்புலிகளின் படகுகள் கடற்கரைக்கு அண்மையாகவே காணப்பட்டன. டோராப் பீரங்கிப் படகுகள் அங்கு செல்வதற்கு கடலின் ஆழம் போதாது. ஆனால் திடீரென தென்பகுதியில் இருந்து 16 கடற்புலிகளின் படகுகள் அங்கு வந்த போது 9:30 மணியளவில் இரு தரப்புக்கும் இடையில் மோதல்கள் ஆரம்பமாகின. மோதல்கள் உக்கிர நிலையை அடைந்த போது கடற்படையினரின் வடபிராந்திய கட்டளைப் பீடம் வான்படையின் உதவியை நாடியது. முற்பகல் 11:00 மணியளவில் அந்தப் பகுதிக்கு வந்த இரண்டு எம்ஐ-24 ரக உலங்குவானூர்திகள் தாக்குதலில் ஈடுபட்டன. அதேசமயம் வெடிமருந்து நிரப்பப்பட்ட இரண்டு கரும்புலிப் படகுகள் டோரா P-413 ஐ நோக்கி விரைந்தன. கடற்படைப் படகில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது ஒரு படகு முன்னரே வெடித்துச் சிதறிய போதும் மற்றைய படகு டோராவிற்கு அண்மையாகச் சென்றுவிட்டது. 12:30 மணியளவில் டோராப் படகில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் வெடித்துச் சிதறிய கரும்புலிப் படகின் வெடிப்பு அதிர்வினால் டோராப் படகின் அடிப்பகுதி கடுமையாகச் சேதமடைந்தது. டோராவின் இயந்திரப் பகுதியும் சேதமடைந்தது. பிற்பகல் 1:30 மணியளவில் மோதல்கள் முடிவுக்கு வந்தன. கடற்புலிப் படகுகள் நாச்சிக்குடாவை நோக்கிச் செல்ல ஆரம்பித்தன. அப்போது கட்டுநாயக்க வான்படைத் தளத்தில் இருந்து புறப்பட்டு வந்த இரு மிக்-27 ரக தாக்குதல் வானூர்திகள் மோதல் நடைபெற்ற கடற்பகுதியில் சில குண்டுகளை வீசின. மோதல் முடிவுக்கு வந்ததும் சேதமடைந்த டோராப் படகை ஏனைய படகுகள் அண்மித்து அதில் இருந்த இரு கடற்படையினரை காப்பாற்றியதுடன், தாக்குதலில் கொல்லப்பட்ட கட்டளைத் தளபதி லலித் எக்கநாயக்கவின் சடலத்தையும் கைப்பற்றினர். அவரின் உடலில் பலத்த எரிகாயங்கள் காணப்பட்டன. அந்தப் பகுதியை கடற்படையினர் சல்லடையிட்டு தேடிய போதும், துணை லெப். உள்ளிட்ட காணாமல் போன 11 கடற்படையினரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் மோதலில் காணாமல் போய்விட்டதாக கடற்படைத் தலைமையகம் தெரிவித்திருந்தது. சேதமடைந்த படகை காங்கேசன்துறை கடற்படைத் தளத்திற்கு கட்டியிழுத்துச் செல்வதற்கு கடற்படையினர் முயற்சித்த போதும் அது மூழ்கி விட்டது. அந்தப் படகை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. இதனிடையே கடற்படையினர் கிழக்கு மாகாணத்தில் உள்ள அறுகம்குடா கடற்பகுதியில் இருந்து 90 கடல் மைல் தொலைவில் உள்ள கடற்பகுதியில் மற்றுமொரு நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர். 15 நாட்களாக கடலில் தத்தளித்த எம்வி வெலிங் என்ற வர்த்தகக் கப்பலை 12 இந்தோனேசியா நாட்டு மாலுமிகளுடன் கடற்படையினர் நத்தார் நாள் அன்று மீட்டனர். நத்தார் நாளுக்கு நாள் அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்ட ஆழ்கடல் ரோந்துப் படகுகள் இந்தோனேசியாவில் பதிவு செய்யப்பட்ட இந்தக் கப்பலை மீட்டன. பின்னர் கொழும்பு துறைமுகத்திற்கு கப்பல் கொண்டுவரப்பட்டதுடன், மாலுமிகள் இந்தோனேசியத் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அந்தக் கப்பலை கடற்படையினர் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் கடந்த வியாழக்கிழமை காலி கடற்படைத் தளத்திற்கு கப்பல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த பொருட்கள் தொடர்பாக கடற்படையினர் எதனையும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஆழ்கடலில் ஆயுதங்களை இறக்கும் பொருட்டு விடுதலைப் புலிகள் கடற்படையினரின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே கடற் சமரில் ஈடுபட்டுள்ளனர் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.