Monday, November 05, 2007

உலகத் தமிழினத்தின் பிரியா விடையோடு விதைக்கப்பட்டார் நம் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன்

[திங்கட்கிழமை, 05 நவம்பர் 2007]

வரலாறு காணாத அளவு மக்கள் அணிதிரண்டு வணக்கம் செலுத்த உலகத் தமிழினத்தின் பிரியா விடையோடு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் வித்துடல் தூய விதைகுழியில் முழுப்படைய மதிப்புடன் இன்று விதைக்கப்பட்டது.

முன்னதாக கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வீரவணக்கக் கூட்டத்தில் வன்னி எங்கிலுமிருந்து திரண்ட மக்கள், விடுதலைப் புலிகளின் துறைப் பொறுப்பாளர்கள், கட்டளைத் தளபதிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், சைவ- கிறிஸ்தவ மதகுருமார்கள், ஆயர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் வித்துடலுக்கு மலர்தூவி மலர்மாலைகள் சூட்டி தமது இறுதி வணக்கத்தைத் தெரிவித்தனர்.

இறுதி வணக்கம் தெரிவித்த மக்கள் கண்ணீர் மல்க உணர்வெழுச்சியுடன் பிரியா விடை கொடுத்தனர்.




வீரவணக்கக் கூட்டம் நிறைவடைய கிளிநொச்சி நகரில் இருந்து கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் நோக்கி வித்துடல் அணியிசை வகுப்புடன் நகர்ந்த போது நகரிலிருந்து துயிலுமில்லம் வரையிலா 6 கிலோமீற்றர் தூரத்திற்கு சாலையில் இருபுறமும் மக்கள் அணிதிரண்டு வணக்கம் செலுத்தினர்.

இச்சாலையில் வீடுகளின் வாசல்கள் தோறும் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் திருவுருவப்படத்தை வைத்து மக்கள் தமது வணக்கத்தைத் தெரிவித்திருந்தனர்.

கிளிநொச்சி நகரிலிருந்து மக்களின் வணக்கத்துடன் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று மாலை 6:00 மணிக்கு வித்துடல் சென்றது. அங்கு இறுதி வணக்கத்துடன் விடுதலைப் புலிகளின் முழுப்படைய மதிப்புடன் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் வித்துடல் உலகத்தமிழினத்தின் பிரியா விடையுடன் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டது.
தமிழீழத் தாயகத்தில் வீர வணக்ககூட்டம் நடைபெற்ற அதேநேரத்தில் புலம்பெயர் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் சமநேரத்தில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு வீர வணக்ககூட்டங்கள் நடைபெற்றன.

தற்போது தமிழகத்திலும் தலைநகர் சென்னையில் வீரவணக்கூட்டம் தொடங்கியுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் வரலாறுகாணாத அளவுக்கு உணர்வெழுச்சியடன் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செலவ்னுக்கு உலகத் தமிழினம் அணிதிரண்டு வீரவணக்கம் செலுத்தி பிரியாவிடை கொடுத்துள்ளது.




மன்னார் ஆயர் இரங்கல்

பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் படுகொலைக்கு மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் இரங்கல் செய்தி விடுத்துள்ளார்.

அவரது இரங்கல் செய்தி:

வன்னியில் வாழ்ந்து வரும் ஒரு கத்தோலிக்க ஆயர் என்ற வகையில் தமிழ்ச்செல்வனுடன் நாட்டின் சமாதானம் பற்றியும் வன்னி மக்களின் தேவைகள் பற்றியும் கடந்த 15 ஆண்டுகளாக நான் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தேன்.

உண்மையானதும் இதய சுத்தியோடும் கூடியதுமான அரசியல் பேச்சுவார்த்தையை சமாதானத்துக்கு வழிவகுக்கும் என்பது அவரிலே வேரூன்றியிருந்தன. மக்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறையும் அன்பையும் நான் பலமுறை கண்டு வியப்படைந்திருக்கின்றேன்.

சமாதானம் பற்றிய எனது கருத்துக்களை வரவேற்றதோடு மக்கள் சார்பாக நான் விடுத்த வேண்டுகோள்களையும் அவர் மகிழ்ச்சியோடு ஏற்று ஆவண செய்துவந்தார். இதனோல் நாடு நன்மை அடைந்தது. மக்களும் ஆறுதல் அடைந்தனர் என்றார் அவர்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.