[செவ்வாய்க்கிழமை, 06 நவம்பர் 2007]
பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு மாவீரர்களுக்கு இலண்டனின் வடமேற்கேயுள்ள ஹரோ லெசர் சென்ரர் மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில் பத்தாயிரம் வரையிலான மக்கள் கலந்து கொண்டனர்.
ஆயிரத்து எண்ணூறு இருக்கைகளைக் கொண்ட லெசர் செனரர் மண்டபத்தில் இருக்கைகளையும் சுற்றி மக்கள் நின்றதால், மண்டபத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதுடன், மலர்தூவி வீரவணக்கம் செலுத்திய மக்கள் வெளியே சென்று ஏனையவர்களை அனுமதிக்குமாறு தாழ்மையுடன் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
நேற்று மாலை 6:15 மணிக்கு ஆரம்பமாகிய வீரவணக்க நிகழ்வில் ஈகச்சுடரினை மாவீரர் லெப்.கேணல் புலேந்திரன் அவர்களின் துணைவியார் திருமதி சுபா அவர்கள் ஏற்றி வைக்க அகவணக்கம் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு வெண்புறா நிறுவனத்தின் ஐரோப்பிய பொறுப்பாளர் மருத்துவர் என்.எஸ்.மூர்த்தி அவர்கள் மலர் மாலை அணிவித்தார்.
இதனையடுத்து லெப்.கேணல் அலெக்ஸ் அல்லது அன்புமணி அவர்களின் திருவுருவப் படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும், மேஜர் மிகுதன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு அவரது சகோதரி திருமதி மோகனதாஸ் அவர்களும் அணிவித்தனர்.
மேஜர் கலையரசன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் அவர்களும் லெப்ரினன்ட் ஆட்சிவேல் அவர்களின் திருவுருவப் படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அவர்களும், லெப்ரினன்ட் மாவைக்குமரன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு திருமதி றேச்சல் அவர்களும் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.
தொடர்ந்து பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் உட்பட, ஆறு மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்கள்.
இதனையடுத்து வீரவணக்க உரைகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பத்மினி சிதம்பரநாதன், வெண்புறா அமைப்பின் ஐரோப்பியப் பொறுப்பாளர் மருத்துவர் என்.எஸ். மூர்த்தி, ஊடகவியலாளரும், ஆய்வாளருமான பற்றிமாகரன், நாடக ஆசிரியரும், ஊடகவியலாளருமான ஏ.சீ.தாஸீசியஸ், பிரித்தானிய தமிழ் அமைப்பு சார்பாக திருமதி ஆனந்தி சூரியப்பிரகாசம், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கொழும்பு அவலக இணைப்பாளர் அர்ஜுனன் எதிர்வீரசிங்கம் ஆகியோர் நிகழ்த்தினர்.
பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு சார்பாக அபிராமி ராஜமனோகன் வீரவணக்க உரையாற்றியதுடன், புலவர் சிவநாதன், துரை சிவபாலன், சிவாஜினி, சங்கீதன் ஆகியோர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு வீரமறவர்களுக்கும் கவிதைகளால் வீரவணக்கம் செலுத்தியதுடன், பிரித்தானிய நாடாளுமன்ற அனைத்துக்கட்சிக்குழு பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் மறைவையொட்டி வெளியிட்ட அறிக்கையும் படித்தளிக்கப்பட்டது.
தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களிற்குப் பின்னர் தமிழர் தரப்பு பேச்சுக்குழுவின் தலைவராக இருந்த பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களை பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு அழத்து, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிய வேண்டுமென கடந்த மே மாதம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஆலோசனையும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
நேற்றிரவு 9.45 மணிவரை சுமார் மூன்றரை மணித்தியாலங்கள் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வில் மண்டபத்தில் அமர்ந்திருந்த மக்களும், உள்ளேவந்து உடனே வெளியே சென்ற மக்களுமாக வீரவணக்க நிகழ்வு ஆரம்பித்ததிலிருந்து நிறைவுபெறும்வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் மலர் வணக்கம் செலுத்தியிருந்தனர்.
தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் துணைவியார் மதிப்பிற்குரிய திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் இந்த வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு, கடந்த இரண்டரை தசாப்தங்களாக விடுதலைப் பயணத்தில் ஒன்றாகப் பயணித்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும், பாசத்திற்குரிய லெப்.கேணல் அன்புமணி அல்லது அலெக்ஸ் அவர்களுக்கும், ஏனைய மாவீரர்களுக்கும் இறுதி மரியாதை செலுத்தியிருந்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.