[ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2007]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசின் மூன்றாவது வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாம்நிலை வாக்கெடுப்பு நாளை நாடாளுமன்றத்தில் இடம்பெறவிருக்கிறது. இந்த பலப்பரீட்சையில் ஆளுந்தரப்பு வெற்றியீட்டும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. அரச தரப்பில் தற்போது 117 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் கட்சி தாவப்போவதில்லை என்று ஜனாதிபதி மஹிந்தவிடம் உறுதியளித்திருப்பதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.
அதேநேரம் எதிரணியில் தற்போது 107 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களில் ஜே.வி.பியினரும் அடக்கம். ஆளுந் தரப்பை வரவு செலவுத்திட்டத்தில் தோற்கடித்து அரசைக் கவிழ்க்கும் நிலை உருவாவதை 37 ஆசனங் களைக்கொண்ட ஜே.வி.பியும் விரும்பவில்லை என்று முடிவெடுத்திருப்பதாக நம்பகரமாக தெரியவருகிறது. எனவே வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருந்து எதிரணியின் வாக்குகளின் எண்ணிக்கையை குறைக்க ஜே.வி.பி. திட்டமிட்டிருக்கிறது. ஜே.வி.பி வாக்களிப்பில் கலந்துகொள்ளாத பட்சத்தில் எதிரணியின் வாக்குப்பலம் 70 ஆக மட்டுமே இருக்கும்.
அத்துடன் அரசுடன் தற்போது இணைந்திருக்கும் முஸ்லிம்காங்கிரஸ் மற்றும் இ.தொ.காவினரும் வரவு வெலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் சாத்தியங்கள் குறைந்துள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் ஆளுந்தரப்பு வெற்றியீட்டுவது பெரும்பாலும் நேற்றையதினமே உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. எனினும் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் ஆளுந்தரப்பை தோற்கடிக்க ஐக்கிய தேசியக்கட்சி தனது முழுமுயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இன்றையதினம் இந்த முயற்சிகள் சூடுபிடிக்கும் சாத்தியக்கூறுகளே உள்ளன.
கண்டியில் நேற்றையதினம் இடம்பெற்ற கட்சி அமைப்பாளர்களின் கூட்டத்தில் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க , அரசாங்கம் எதிரணி உறுப்பினர்களை பில்லியன் கணக்கான நிதி கொடுத்து வளைத்துப்போட முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். அதேவேளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு திட்டமிட்டபடி வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்கும் என்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.