[புதன்கிழமை, 28 நவம்பர் 2007]
இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரை விடுதலைப் புலிகளால் என்னை படுகொலை செய்து விட முடியாது என்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் சமூக சேவைகள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கொழும்பு 5 இலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் அவரது அலுவலகத்தில் வைத்து மாலை வேளையில் ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது:
எனது அமைச்சின் அலுவலகத்தில் வைத்து காலை தற்கொலை செய்து கொண்ட தற்கொலை குண்டுதாரி வவுனியாவைச் சேர்ந்தவர் அவர் வலது குறைந்தவர் அல்ல என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.
காலை 6 மணியளவிலேயே நான் அமைச்சுக்கு வந்து விட்டேன். என்னை சந்திப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். சந்திக்க வருகின்றவர்கள் தனது அடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் பாதுகாப்பு கடமைகள் முடிந்ததன் பின்னரே என்னை சந்திப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
அவ்வாறே என்னை சந்திப்பதற்காக வருகை தந்திருந்த பெண்ணை (தற்கொலை குண்டுதாரியை) அமைச்சின் எனது பொதுமக்கள் தொடர்பு அதிகாரி அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர் உள்ளே அனுப்புவோம் எனக் கூறி குறிப்பிட்ட பெண்ணை அமர வைத்திருக்கின்றார்.
தற்கொலை குண்டுதாரி எத்தனை மணிக்கு வந்தார் என்று தெரியாது. எனினும் காலை 8.05 மணியளவிலேயே தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலையாளியின் உடலையும் நான் பார்வையிட்டு விட்டே பாராளுமன்றம் வந்தேன்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.