Monday, November 19, 2007

மட்டக்களப்பில் தமிழ் அரசியல் கைதிகளில் உண்ணாநிலைப் போராட்டம் முடிவுக்கு வந்தது

[திங்கட்கிழமை, 19 நவம்பர் 2007] மட்டக்களப்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை முதல் தமிழ் அரசியல் கைதிகள் 28 பேர் மேற்கொண்டு வந்த உண்ணாநிலைப் போராட்டம் நேற்றிரவு முடிவுக்கு வந்தது. பயங்கரவாத நடவடிக்கைகளில் தொடர்புடையோர் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்ட போதும் நீதிமன்றில் இதுவரை முன்னிலைப்படுத்தாமல் சிறையிலேயே அடைக்கப்பட்டிருந்தனர். விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிறைக்கூரையின் மீதும் ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டோருடன் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவினர் நேற்று பேச்சுக்களை நடத்தினர். இப்பேச்சுக்களைத் தொடர்ந்து தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது. உண்ணாநிலைப் போராட்டத்தின் போது மயக்கமடைந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட இருவருக்கு மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள 28 பேரும் தங்களை விடுவிக்கக்கோரி சிறைக்கூரை மீது ஏறி நின்று போராட்டம் நடத்தினர். மட்டக்களப்பு சிறைச்சாலையின் கூரை மீது ஏறியிருந்து உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் நேற்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 29 தமிழ் அரசியல் கைதிகள் தம்மீது வழக்குத் தாக்கல் செய்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கோரி சிறைச்சாலை கூரை மீது ஏறியிருந்து சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தினை ஆரம்பித்தனர். கூரை மீது ஏறியுள்ள கைதிகள் கடும் வெப்பத்தினையும் பொருட்படுத்தாது தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தம்மை வந்து சந்திக்க வேண்டும் என்றும், தமது விடுதலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த இரு வருடங்களுக்கு மேலாக தாம் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கைதிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.