Wednesday, November 14, 2007

இவ்வருடம் இருபதாயிரம் புதிய படை உறுப்பினர்கள் - கோதபாய

[புதன்கிழமை, 14 நவம்பர் 2007]

சிறீலங்காவின் முப்படைகளுக்கான ஆட்சேர்ப்பில் இவ்வருடம் மட்டும் இருபதாயிரம் இளைஞர்கள் புதிய உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் படைகளில் இணையும் வகையில் விளம்பர உதவிபுரிந்த அரச ஊடகங்களுக்கு கோத்தபாய நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மன்னாரிலும், முகமாலையிலும் அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் பல நூற்றுக்கணக்கான படையினர் களத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், சிறீலங்காப் படைக்கு மீண்டும் ஆட்பற்றாக்குறை ஏற்பட்டிருந்த நிலையில், அதனை நிவர்த்தி செய்யும் வகையில் நேற்று முன்தினம் முதல் படையிலிருந்த தப்பியோடியோருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக சிறீலங்கா படைத்தலைமை அறிவித்திருந்தது.

இம்மாதம் 25ஆம் நாள்வரை இரண்டு வாரங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பில், 2004ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் நாளுக்கு முன்னர் படைகளிலிருந்து தப்பியோடிவர்கள் மீண்டும் இணைந்து கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீண்டும் பணியில் இணைபவர்களுக்கு தண்டனை வழங்கப்பட மாட்டாது எனவும், அவர்கள் முன்னர் இருந்த படை நிலைக்கே மீண்டும் அமர்த்தப்படுவார்கள் எனவும் படைத்தலைமையின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.