Thursday, November 01, 2007
இராணுவச் செய்திகளுக்குத் தடை: சிறிலங்கா அரசாங்கம் திடீர் பல்டி
[புதன்கிழமை, 31 ஒக்ரோபர் 2007]
சிறிலங்கா இராணுவம் தொடர்பான செய்திகளை வெளியிடத் தடை விதித்த சில மணி நேரங்களிலேயே சிறிலங்கா அரசாங்கம் திடீர் பல்டி அடித்து தடையை விலக்கிக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஊடகச் செயலாளர் சந்திரபால லியனகே கூறியுள்ளதாவது:
சிறிலங்கா இராணுவம் தொடர்பான செய்திகளை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது.
ஏ.பி.சி. நிறுவனத்தின் பொறுப்பற்ற செய்தி ஒலிபரப்பினால் அத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தற்போது வழமையான சட்டங்களின் கீழேயே நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஆகையால் இத்தகைய வர்த்தமானி அறிவித்தல் தேவையில்லை என்று மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளார் என்றார் அவர்.
முன்னதாக சிறிலங்காவில் இராணுவம் தொடர்பான செய்திகளை வெளியிட்டால் 5 வருடகால சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அதிரடியாக அறிவித்திருந்தார்.
மகிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரில் அவசரகாலச் சட்ட விதிகளின் படி இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
கடந்த திங்கட்கிழமை (29.10.07) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த உத்தரவை அமுல்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.
அந்த வர்த்தமானி அறிவித்தலின் படி இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான செய்திகளையோ அல்லது ஆயுதக்கொள்வனவு மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட முப்படையினரின் செயற்பாடுகள் தொடர்பான செய்திகளையோ வெளியிட முடியாது என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த உத்தரவை மீறி செய்திகளை வெளியிட்டால் பத்திரிகை ஆசிரியருக்கு 5 வருடகால சிறைத்தண்டனையும் 500 முதல் 5 ஆயிரம் ரூபா வரை தண்டப் பணம் அறவிடப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
அத்தகைய செய்திகளை வெளியிட வேண்டுமாயின் மகிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட குழுவிடம் காட்டி அவர்களின் தணிக்கைக்குப் பின்னரே அதனைப் வெளியிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தியதனைத் தொடர்ந்து சிறிலங்கா அரசுக்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது. பேரழிவு தொடர்பான தகவல்களை நாளாந்தம் சிறிலங்கா ஊடகங்கள் வெளியிட்டு வரும் நிலையில் அதனைத் தடுக்க இத்தகைய ஊடகத் தணிக்கையை மகிந்த அரசாங்கம் அறிவித்தது.
ஆனால் வெளிநாட்டுத் தூதரகங்கள், அனைத்துலக ஊடக அமைப்புகள் ஆகியவற்றின் அழுத்தங்களால் தான் தற்போது மகிந்த அரசாங்கம் திடீரென்று பின்வாங்கியுள்ளது என்று ஊடக அமைப்பினர் சாடியுள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.