Thursday, November 01, 2007

மன்னார் மும்முனை நகர்வுகள் விடுதலைப் புலிகளால் முறியடிப்பு: 60 படையினர் படுகாயம்.!!

[வியாழக்கிழமை, 01 நவம்பர் 2007] மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான மும்முனை நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு, படைத்தரப்பினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் 60-க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர். இன்று வியாழக்கிழமை அதிகாலை 5:00 மணிமுதல் பிற்பகல் 12:00 மணிவரை நடைபெற்ற மோதலில் படைத்தரப்பின் முன்னகர்வுகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் படைத்தரப்பினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. 60-க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மன்னாரின் குறிசுட்டகுளம்- பாலைக்குழி- கட்டுக்கரைக்குளம் ஆகிய மும்முனைகளில் இருந்து சிறிலங்காப் படையினர் செறிவான ஆட்டிலெறி- பல்குழல்- மோட்டார் தாக்குதல்களை செறிவாக நடத்தியவாறு பாரிய எடுப்பில் முன்னகர்வுகளை மேற்கொண்டனர். பெரும் எண்ணிக்கையிலான படையினர் இந்த நகர்வில் ஈடுபட்டனர். படையினர் அதிகாலை 5:00 மணிக்கு நகர்வுகளை மேற்கொண்டனர். அதேவேளையில் கட்டுக்கரைக்குளம் முதல் திருக்கேதீச்சரம் வரையான பகுதிகளிலும் சிறிலங்காப் படையினர் தாக்குதல்களை மேற்கொண்டனர். படையினரின் இந்த பாரியளவிலான முன்னகர்வுகளை 7:00 மணிநேர தீவிர தாக்குதல் மூலம் விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் படைத்தரப்புக்கு பாரிய அழிவுகள் இழப்புக்கள ஏற்பட்டுள்ளன். 60-க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்த நிலையில் தள்ளாடிப் படைத்தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதன் பின்னர் அங்கிருந்து உலங்குவானூர்திகள் மூலம் அநுராதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். படையினரின் இந்த நகர்த்தலுக்காக மன்னார்- வவுனியா போக்குவரத்து, மன்னார்- வங்காலைப் போக்குவரத்து மக்கள் நடமாட்டம் ஆகியன சிறிலங்காப் படையினரால் தடை செய்யப்பட்டன. அநுராதபுர மருத்துவமனைத் தகவல்களின் படி மருத்துவமனை கடும் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. காயமடைந்த படையினாரால் மருத்துவமனை பரபரப்பாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவமனையில் குடிமக்கள் சிகிச்சைக்காக தங்கியிருக்கும் நிலையில் அவர்களில் குறைந்த பாதிப்புக்கொண்டோரை பிற மருத்துவமனைகளுக்கு செல்லுமாறு படைத்தரப்பால் பணிக்கப்பட்டு அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மருத்துவமனை விடுதிகளில் அதிகளவில் படையினர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இம் மோதலின் போது முருங்கனில் வீட்டு முற்றத்தில் நின்ற ஆத்திக்குளியைச் சேர்ந்த இமானுவேல் சுரேந்தினி (வயது 33) மீது முற்பகல் 9:00 மணிக்கு துப்பாக்கிக்குண்டு பாய்ந்துள்ளது. முருங்கன் மருத்துவமனையிலிருந்து மன்னார் மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது வழியில் அவர் உயிரிழந்துவிட்டார். அவரது சடலம் மன்னார் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நன்றி:புதினம்

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.